பாமக பந்த் அறிவிப்பு: கடலூரில் கடைகள், பஸ்கள் வழக்கம் போல் இயங்கின

கடலூர்: என்எல்சி சுரங்க விரிவாக்க பணிகளுக்காக, கடலூர் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதை கண்டித்து பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதற்கும், சமன்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, கடலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை கடலூரில் அனைத்து கடைகளும் வழக்கம்போல் திறந்திருந்தன. அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கின. தொலைதூரம் செல்லக்கூடிய அரசு பேருந்துகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டம் முழுவதும் 7 எஸ்பிக்கள் தலைமையில் 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவை சேர்ந்த 55 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடைகளும் பஸ்களும் வழக்கம் போல் இயங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை.

Related Stories: