தமிழ்நாடு அரசுத் துறைகளின் இ – சேவைக்கான இணைய வழி கட்டணத்தை இலகுவாக செலுத்திட SBI ePAY-யை பயன்படுத்த TNeGA, SBI இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில், தமிழ்நாடு அரசுத் துறைகளின் இ – சேவைக்கான இணைய வழி கட்டணத்தை இலகுவாக செலுத்திட, பாரத ஸ்டேட் வங்கியின் கட்டணத்  திரட்டு செயலியான (SBI ePAY)-யை பயன்படுத்த, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, அனைவருக்கும் எளிதான, வெளிப்படையான மற்றும் விரைவான சேவைகளை வழங்குவது அரசின் முன்னுரிமை என்றும், இதனை அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளும் பணியினை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையில் ஒப்படைத்துள்ளார்.     

தற்போது அரசுத் துறைகள் மின்-ஆளுமை சேவைக் கட்டணத்தை பொது மக்கள் மற்றும் வணிகர்களிடமிருந்து  பெறுவதற்காக பல்வேறு கட்டண  நுழைவு  வாயில்களை பயன்படுத்தி வருகின்றன.    இதற்கான வர்த்தக பேச்சுவார்த்தை மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்காக பெரும் நேரம் மற்றும் முயற்சி  செலவிடப்படுகிறது.

    

தற்போது, தமிழ்நாடு அரசு, ஒரு முழுமையான தானியங்கு தீர்வு ஒன்றினை பயன்படுத்த முடிவு செய்து,  பாரத ஸ்டேட் வங்கியின் “கட்டணத் திரட்டு செயலியான” SBIePAY –யை ஒற்றைத்  தீர்வாக கண்டறிந்துள்ளது.  SBIePAY ஒரு கட்டணத்  திரட்டு செயலி ஆகும்.   

இச்செயலி அனைத்து வகையான டெபிட் / கிரெடிட் கார்டுகள், யுபிஐ (UPI), பேமென்ட் பெட்டகம் (wallet) மற்றும் இணைய வங்கி (Internet Banking) கட்டணங்களை வசூலிக்கவும், சேகரிக்கவும், ஒத்திசைவு செய்யவும் எளிதான ஒருங்கிணைந்த கட்டண இயங்கமைவு ஆகும்.

இது தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA), மற்றும் அரசுத் துறைகளின்  கட்டண செலுத்து முறைகளுக்கு எளிதான அமைப்பு ஆகும்.  பாரத ஸ்டேட் வங்கி இந்த சேவையை, சந்தை விலையைவிட குறைவாக, “உபயோகிப்பு அளவு” அடிப்படையில் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

    

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) மற்றும் பாரத ஸ்டேட் வங்கியுடனான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அனைத்து அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் இந்த சேவையை கால தாமதமின்றியும் பணவிரயமின்றியும் பயன்படுத்தி கொள்ளலாம்.

    

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (10.03.2023)   தமிழ் நாடு மின் ஆளுமை அலுவலகத்தில், தமிழ் நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் மாண்புமிகு அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

    

இந்த நிகழ்ச்சியில் ஜெ.குமரகுருபரன், செயலாளர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, பிரவீன் பி. நாயர், முதன்மை  நிர்வாக அலுவலர்,  தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, ஆர். ராதாகிருஷ்ணா, தலைமைப்  பொது மேலாளர், பாரத ஸ்டேட் வங்கி (சென்னை வட்டம்), மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, பாரத ஸ்டேட் வங்கி  உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: