பெரம்பூர்: பெரம்பூரில் வடமாநில தொழிலாளர்களை தாக்கிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொளத்தூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பூங்காவனம் (27). இவர், வடமாநில தொழிலாளர்கள் 50 பேரை வைத்து, பெரம்பூர் பல்லவன் சாலையில் மழைநீர் வடிகால் பணிகளை ஒப்பந்த முறையில் செய்து வருகிறார். இவரிடம் நஜ்மல் மற்றும் அர்வாஜ் ஆகிய இருவர் பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் நேற்று முன்தினம் காந்தி நகர் சந்திப்பில் தண்ணீர் பிடிக்க சென்றபோது, அங்கிருந்த இரண்டு பேர் இரண்டு வடமாநில தொழிலாளர்களை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர்கள் பணம் தர மறுக்கவே அவர்களது கூகுள் பே நம்பரை கொடுத்து, இதில் பணம் அனுப்ப வேண்டும், இல்லை என்றால் உங்களை வெட்டி விடுவேன் என கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் நேற்று இருவரும் அதே இடத்திற்கு தண்ணீர் பிடிக்க சென்றபோது, அங்கிருந்த ரவுடிகள் 2 பேரும் ஏன் இன்னும் பணம் அனுப்பவில்லை என்று கேட்டு கத்தியை காட்டி மிரட்டி வட மாநிலத்தவர் இருவரையும் பலமாக அடித்துள்ளனர். இதில், பாதிக்கப்பட்ட இருவரும், தங்கள் ஒப்பந்ததாரரான பூங்காவனத்திடம் தெரிவித்தனர். இதுகுறித்து திருவிக நகர் காவல் நிலையத்தில் பூங்காவனம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருவிக நகர் காந்தி நகர் பகுதியை சேர்ந்த புறா (எ) விஜய் (20), அதே பகுதியை சேர்ந்த டேனியல் (19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் ஏற்கனவே சில குற்ற வழக்குகள் உள்ளதும், இவர்கள் வட மாநிலத்தவர்களை மிரட்டி குடிப்பதற்கு பணம் வாங்கியதும் தெரியவந்தது. இதனையடுத்து, 2 பேரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.