கூகுள் பே மூலம் நூதன மோசடி வாட்ஸ் அப்பில் லிங்கை தொட்டதால் ரூ.65,000 போச்சு..: காஷ்மீரில் ராணுவ வீரர் பெயரில் கைவரிசை

தூத்துக்குடி: கோவில்பட்டியைச் சேர்ந்த பர்னிச்சர் கடை உரிமையாளரிடம் காஷ்மீரில் இருந்து ராணுவ வீரர் பேசுவதாக கூறி ஏமாற்றி கூகுள் பே-யில் ரூ. 65 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (52). பர்னிச்சர் கடைகள் நடத்தி வருகிறார். இவருடன், சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் இருந்து சாகில் குமார் என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் ராணுவ வீரர் உடையுடன் ஒரு நபர் தொடர்பு கொண்டு பர்னிச்சர் பொருட்கள் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு கார்த்திகேயன், அங்கேயே வாங்கலாமே என்றதற்கு சாத்தூரில் உள்ள ஒரு நண்பருக்கு அன்பளிப்பு அளிக்க வேண்டும், உங்களது கடை  ஆன்லைனில் 4 ஸ்டார் பெற்றுள்ளது என்பதால் தொடர்பு கொண்டேன் என்று பதிலளித்துள்ளார்.

இரு நாட்களுக்குப் பின் கார்த்திகேயன், அவரது வாட்ஸ் அப்பில் பொருட்களின் மாடல்களை அனுப்பி உள்ளார். இதை தொடர்ந்து மீண்டும் வாட்ஸ்அப் கால் மூலம் தொடர்பு கொண்ட சாகில் குமார், தனக்கு ஒரு சோபா மற்றும் கட்டில் பிடித்துள்ளதாக கூறி ரூ.80 ஆயிரம் என்பதை ரூ.75 ஆயிரத்திற்கு பேரம் பேசி முடித்துள்ளார். பின்னர் ஆன்லைன் மூலம் பணம் அனுப்புவதாக கூறி, ராணுவ வீரர் என்பதால் கரண்ட் அக்கவுண்டில் பணம் அனுப்ப முடியாது, உங்கள் பர்சனல் கணக்கு விபரங்களை கொடுங்கள் என கேட்டுள்ளார். இதனால் அவர் தனது மகன் அருண்குமார் வங்கி கணக்கு விவரம் மற்றும் கூகுள் பே நம்பரை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி உள்ளார்.  

உடனே அவரை தொடர்பு கொண்டு இரண்டு முறை ஒரு ரூபாய் போட்டு வந்துள்ளதா என உறுதிப்படுத்தியுள்ளார்.  அடுத்த கட்டமாக ரூ.65 ஆயிரம் அனுப்புவதாக கூறி ஒரு லிங்க்கை அனுப்பியுள்ளார். இதனை அருண்குமார் தொட்டதும். அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.65,000 எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் சாகில் குமாரை தொடர்பு கொண்டு ஏன் பணம் எடுத்தீர்கள் என கேட்டதற்கு மீண்டும் மீண்டும் ரூ.35 ஆயிரம், ரூ.18 ஆயிரம் என பல லிங்க்குகளை அனுப்பி வைக்க அதை அருண்குமார் தொடவில்லை. இதுகுறித்து கார்த்திகேயன் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Related Stories: