இந்திய கடற்படையின் கூட்டு போர் பயிற்சி நிறைவு

புதுடெல்லி: இந்திய கடற்படையின் பிரம்மாண்ட கூட்டு போர் பயிற்சியான டிரோபெக்ஸ் 2023 அரபிக்கடலில் நேற்று நிறைவடைந்தது.  2023ம் ஆண்டுக்கான டிரோபெக்ஸ் கூட்டு போர் பயிற்சி 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய பெருங்கடல் பகுதியில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், நேற்று அரபிக்கடல் பகுதியில் நிறைவுபெற்றது. இதுகுறித்து கடற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறியதாவது, “இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, கடலோர காவல்படை உள்ளிட்டவை இணைந்து பங்கேற்ற இந்த பயிற்சியில், கடலோர பாதுகாப்பு பயிற்சி. கடலோரம் மற்றும் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் பயிற்சி உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. அரபிக்கடல், வங்காள விரிகுடாவை உள்ளடக்கிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் சுமார் 21 மில்லியன் சதுர கடல்மைல் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டது. இந்த பயிற்சியில் 70 போர்க்கப்பல்கள், 6 நீர் மூழ்கி கப்பல்கள், 75க்கும் மேற்பட்ட விமானங்கள் கலந்து கொண்டன. இந்த கூட்டு போர் பயிற்சியின் ஒருபகுதியாக கடந்த 6ம் தேதி, இந்தியாவின் முதலாவது விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் கப்பல்படை கமாண்டர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு, இந்திய கப்பல்படையின் செயல்திறன்கள் குறித்து ஆய்வு செய்தார்” என்று தெரிவித்தார்.

Related Stories: