எத்தியோப்பியாவிலிருந்து கடத்தி வந்த ₹64 கோடியிலான ஹெராயின் பறிமுதல்: குஜராத் முதியவர் கைது

சென்னை: எத்தியோப்பியா விமானத்தில், சென்னைக்கு கடத்தி வந்த ₹64 கோடி மதிப்புள்ள 8.26 கிலோ ஹெராயின் போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, குஜராத்தை சேர்ந்த 79 வயது முதியவர் கைது செய்தனர். எத்தியோப்பியா தலைநகர் அடீஸ் அபாபாவிலிருந்து, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு, செவ்வாய்க்கிழமை காலை வந்தது. அதில், போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வு துறையின் தனிப்படையினர், சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் போல கண்காணித்தபடி இருந்தனர். இந்நிலையில், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து, குஜராத்தை சேர்ந்த 79 வயது முதியவர், சுற்றுலா விசாவில் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சென்று விட்டு, எத்தியோப்பியா வழியாக விமானத்தில் வந்தார்.

சந்தேகத்தின் அடிப்படையில், அவரது உடமைகளை சோதனையிட்டபோது, அவருடைய சூட்கேசுக்குள் 2 பார்சல்களில் 8.26 கிலோ ஹெராயின் போதைப் பொருள் இருந்தது. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். ஹெராயின் போதைப்பொருளின் சர்வதேச விலை ஒரு கிலோ ₹8 கோடி. மொத்தம் 8 கிலோ 26 கிராம் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ₹64 கோடி. இதை தொடர்ந்து, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், 79 வயது முதியவரை கைது, ஹெராயின் போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.

பிறகு முதியவரை, சென்னை தி. நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அதில், குஜராத்தை சேர்ந்த அனில் பால்கிஷன் தாஸ் (79), சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. இவர் கொடுத்த தகவலின்படி, ₹64 கோடி மதிப்புடைய 8.26 கிலோ போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளி நேற்று அதிகாலை டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: