காதலியிடம் ரூ.68 லட்சம் மோசடி போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்த காதலனின் சடலம் மீட்பு

பூந்தமல்லி: காதலித்து இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.68 லட்சம் மோசடி செய்த வழக்கில், போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட காதலனின் சடலம் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் நிஷாந்த் (29). இவர் பள்ளியில் படிக்கும் போது வடபழனியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த அவர், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த இளம்பெண்ணிடம் ரூ.68 லட்சம் வரை பணம் பெற்று திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்தார். மேலும் இதற்கிடையே சென்னையில் தொழிலதிபரின் மகள் ஒருவரை திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தது.

இதுகுறித்து நிஷாந்தின் காதலி மதுரவாயல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையறிந்த தொழிலதிபர் மகளுடன் நிஷாந்துக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டார். இதற்கிடையே போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தலைமறைவான நிஷாந்தை  தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு நண்பர்களின் செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக குறுந்தகவல் அனுப்பி விட்டு அவரது நண்பரின் காரை எடுத்து வந்து போரூர் மேம்பாலத்தின் மீது நிறுத்தி விட்டு போரூர் ஏரியில் நிஷாந்த் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், நீச்சல் வீரர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஏரியில் தேடி வந்தனர். ஏரியில் நிஷாந்தின் உடல் ஏதும் கிடைக்காததால் நேற்று முன்தினம் தேடும் பணியை தீயணைப்பு வீரர்கள் நிறுத்தினார்கள்.

இந்நிலையில், போரூர் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போரூர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்டவர், இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.68 லட்சம் மோசடி செய்து போலீசாரால் தேடப்பட்டு வந்த நிஷாந்த் என்பதை போலீசார் உறுதி செய்தனர். ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிஷாந்தின் சடலம் 3 நாட்களாகி விட்டதால் அழுகிய நிலையில் காணப்பட்டது. தொடர்ந்து, போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: