தூத்துக்குடியில் ஒரேநாளில் அடுத்தடுத்து லாரி டிரைவர் உள்ளிட்ட 4 பேரை தாக்கி செல்போன் பணம், பைக் பறித்த கும்பல் சிக்கியது-தலைமறைவானவருக்கு வலை

தூத்துக்குடி : தூத்துக்குடியில் ஒரேநாளில் ஜார்க்கண்ட் லாரி டிரைவர் உள்ளிட்ட 4 பேரை தாக்கி செல்போன், பணம், பைக் பறித்து சென்ற கும்பல் சிக்கியது.ஜார்கண்ட் மாநிலம் ஹாசாரி பாக் மாவட்டத்தை சேர்ந்தவர் திவான் மகன் விஜய் பிக்கி யாதவ்(37). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்கிறார். இவர் துறைமுகத்தில் இருந்து லாரியில் சிமெண்ட் ஏற்றிக்கொண்டு மீன்வளக்கல்லூரி அருகே தனியார் நிறுவனத்தில் இறக்கியுள்ளார்.

பின்னர் லாரியை அப்பகுதியில் நிறுத்திவிட்டு ஓட்டலில் சாப்பிட சென்றார். திரும்பி வரும் போது ஒரே பைக்கில் வந்த 3பேர் திடீரென பிக்கி யாதவை வழிமறித்து மிரட்டி, பணத்தை பறிக்க முயன்றுள்ளனர். அவர் தர மறுத்து போராடியதால் ஆத்திரமடைந்த மூவரும் தாக்கி, அவரிடம் இருந்த ரூ.13 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இதில் படுகாயமடைந்த விஜய் பிக்கி யாதவ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே தூத்துக்குடி சிலோன்காலனி பகுதியில் சென்ற ஒரு வாலிபரையும் பைக்கில் வந்த கும்பல் தாக்கி, செல்போனை பறித்து சென்றது.பின்னர் புதுக்கோட்டை பழையபாலம் அருகே திருப்பத்தில் சென்ற ஒருவரையும் தடுத்த 5பேர் கும்பல் அவரை அரிவாள் முனையில் ரூ.5 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றது. பின்னர் அந்தோணியார்புரம் சென்ற அந்த கும்பல் அங்கு ஒருவரை தாக்கி அவரது பைக்கை பறித்து சென்றது.

இதுகுறித்து தென்பாகம், புதுக்கோட்டை போலீசார் விசாரித்து வந்தனர். இந்த சம்பவங்களில் ஈடுபட்ட புதுக்கோட்டை அய்யனார் காலனி பாலமுருகன்(23), முருகன் என்ற குட்டை முருகன்(23), முத்துக்குமார்(26) மற்றும் தூத்துக்குடி ராஜகோபால் நகர் மாரிதங்கம்(22) ஆகிய 4 பேரை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1 பைக், 2 செல்போன்கள், ரூ.13,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான சுடலைகண்ணு என்பவரை தேடி வருகின்றனர்.

இவர்களில் குட்டை முருகன் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் முத்துப்பாண்டி என்பவர் கொலையில் தொடர்புடையவர். பாலமுருகன் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கஞ்சா, தீண்டாமை வழக்கும் உள்ளது. மேலும் தீண்டாமை வழக்கில் தலைமறைவாக இருந்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, போலீசாரால் தேடப்பட்டு வரும்போது இந்த சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: