பாஜ நிரந்தரமாக ஆட்சியில் இருக்க முடியாது ஜனநாயகத்தை சீர் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும்: லண்டனில் ராகுல் பேச்சு

லண்டன்: ‘பாஜ நிரந்தரமாக ஆட்சியில் இருக்க முடியும் என நம்புகிறது. ஆனால் அது நடக்காது ’ என லண்டனில் தனது நிறைவு நாள் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசினார். இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு ஒருவார பயணமாக சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசினார்.   இந்நிலையில், தனது பயணத்தின் நிறைவாக, சர்வதேச விவகாரங்களில் இங்கிலாந்து அரசுக்கு ஆலோசனை தெரிவிக்கும் சதம் ஹவுஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்று, பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது: சுதந்திரம் கிடைத்ததில் இருந்து இப்போது வரை பார்த்தால், காங்கிரஸ் தான் பெரும்பான்மையான காலகட்டங்களில் ஆட்சி செய்துள்ளது. பாஜ 10 ஆண்டு ஆட்சி செய்வதற்கு முன்பாக, காங்கிரஸ் 10 ஆண்டு ஆட்சியில் இருந்துள்ளது.

ஆனால், மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்ட பாஜ இனி நிரந்தரமாக ஆட்சியில் இருக்கப் போவதாக நம்பிக் கொண்டிருக்கிறது. அப்படி நடக்காது. ஜனநாயகத்திற்கு தேவையான சீர்த்திருத்த பணிகளை மேற்கொள்ள எதிர்க்கட்சிகள் இம்முறை ஒன்றிணையும். பாஜ ஆட்சியில் இருப்பதால் காங்கிரஸ் இல்லாமல் போய்விட்டது என்பது உண்மையில்லை. அது அபத்தமானது. மாற்று கருத்து கொண்டவர்களை மவுனமாக்க பாஜ முயற்சித்து வருகிறது. இதற்காக எனது போனிலும் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி ஒட்டுகேட்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் என்பது ஒரு அடிப்படைவாத, பாசிச அமைப்பு. அதை நீங்கள் ரகசிய சமூகம் என்றும் சொல்லலாம்.

முஸ்லிம் சகோதரத்துவத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ், ஜனநாயகப் போட்டியை பயன்படுத்தி ஆட்சிக்கு, பின்னர் ஜனநாயகப் போட்டியை சீர்குலைக்கும் முயற்சி செய்கிறது. நாட்டின் பல அரசு நிறுவனங்களை கைப்பற்றுவதில் அவர்கள் எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. பத்திரிகை, நீதித்துறை, நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்தையும் ஏதோ ஒரு வகையில் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதியான உறவு அவசியமானது. ஆனால், அது நிறைவேறுவது பாகிஸ்தானின் நடவடிக்கைகளை பொறுத்தது. இவ்வாறு ராகுல் கூறினார்.

* உக்ரைன் நிலையில் இந்தியா இருக்கிறது

சீன எல்லை விவகாரம் குறித்து ராகுல் பேசுகையில், ‘‘அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் உக்ரைன் கொண்டிருக்கும் நட்பை ரஷ்யா ஏற்கவில்லை. அந்த உறவை உக்ரைன் கைவிடவில்லை என்பதால், அந்த நாடு துண்டுகளாகிக் கொண்டிருக்கிறது. இதுதான் எங்கள் எல்லையிலும் நடக்கிறது. அருணாச்சல், லடாக்கில் உள்ள சீன துருப்புகளின் பின்னணியில் உள்ள அடிப்படை யோசனை உக்ரைனில் நடந்ததைப் போன்றதே.

அமெரிக்கா உடனான உறவுக்காக இந்தியாவை சீனா அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதை நான் வெளியுறவு அமைச்சரிடம் கூறிய போது அவர் என் கருத்துடன் முற்றிலும் உடன்படவில்லை. இது ஒரு நகைச்சுவையான யோசனை என நினைக்கிறார். சீனா நம் எல்லையில் 2,000 சதுர கிமீ நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது. ஆனால் பிரதமர் அங்கு எதுவும் நடக்கவில்லை என்கிறார்’’ என்றார்.

* பாஜ கண்டனம்; காங். பதிலடி

ஒன்றிய முன்னாள் அமைச்சரும், பாஜ தலைவருமான ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘மாவோயிஸ்ட் சிந்தனை கொண்ட தனது கூட்டாளிகள் மற்றும் அராஜக சக்திகளின் பிடியில் ராகுல் முழுமையாக உள்ளார் என்பது தெளிவாகிறது. அவர் இந்திய ஜனநாயகம், அரசியல், நாடாளுமன்றம், நீதித்துறை, பாதுகாப்பு துறையை அந்நிய மண்ணில் அவமதிக்கிறார். இந்தியாவில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தலையீட்டை விரும்புகிறார். ஆர்எஸ்எஸ் இந்துத்துவா அமைப்பு சமூகத்திற்கும், தேசத்திற்கும் சேவை செய்து வருகிறது’’ என்றார்.

இதற்கு பதிலடி தந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில், ‘‘சிதைத்தல், திரித்தல், முகத்திற்கு நேராக பொய் பேசுதல் என தனது தலைமையின் வழியில் ரவி சங்கர் பிரசாத் செயல்படுகிறார். ஆளுங்கட்சியின் வேலையில்லாத தலைவர் ஒருவர் மீண்டும் வேலைவாய்ப்பை பெற முயற்சிப்பதை பார்ப்பதை விட வேடிக்கையானது எதுவுமில்லை’’ என்றார்.

Related Stories: