ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்டது ஹவாலா பணமா? பெரம்பூர் ரயில் நிலையத்தில் 68 லட்சம் ரூபாய் சிக்கியது: கைதான 2 பேரிடம் விசாரணை

பெரம்பூர்: பெரம்பூர் ரயில் நிலையத்தில் கடத்திவரப்பட்ட 68 லட்ச ரூபாயை பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட ஹவாலா பணமா என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் போலீசாரின் பாதுகாப்பு அதிகம் உள்ளதால் அதற்கு முந்தைய ரயில் நிலையமான பெரம்பூர் ரயில் நிலையத்தை முறைகேடுகளில் ஈடுபடும் கும்பல்கள் சமீபகாலமாக பயன்படுத்தி வருகின்றனர். இதன்படி, வெளிமாநிலங்களில் இருந்து கடத்திவரப்படும் கஞ்சா, மதுபாட்டில்கள் மற்றும் ரேஷன் அரிசிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறக்கி அங்கிருந்து கொண்டு செல்கின்றனர். இதுசம்பந்தமாக அடிக்கடி ஏராளமான புகார்கள் வந்ததால் சமீபகாலமாக பெரம்பூர் ரயில் நிலையத்தில் போலீசாரின் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், பெரம்பூர் ரயில்வே போலீசார் நேற்று மாலை 7 மணி அளவில், பெரம்பூர் ரயில் நிலைய பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த லோக்மானிய திலக் விரைவு ரயில் பெரம்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தது அந்த ரயிலில் இருந்து பயணிகள் இறங்கி சென்றுகொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பொது பெட்டியில் இருந்து இரண்டு பேர் இறங்கி கையில் பெரிய பேக்குடன் வேகமாக நடந்து சென்றனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் உடனடியாக அவர்களை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தியதுடன் அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்தனர். அப்போது இரண்டு பைகளிலும் கட்டு, கட்டாக பணம் இருந்தது. இதுபற்றி விசாரித்தபோது அவர்கள் முறையான பதிலை தெரிவிக்கவில்லை.

இதையடுத்து இரண்டு பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த சுனில்குமார் (39), அப்துல் ரகுமான் (22) என தெரியவந்தது. இவர்கள் இருவரிடமும் இருந்து தலா 35 லட்சம் மற்றும் 33 லட்சம் என்று மொத்தம் 68 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் கொடுத்த தகவல்படி, வருமான வரித்துறை அதிகாரி பாலச்சந்திரன் வந்து பணம் மற்றும் இருவரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றார். பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணமா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: