மகளிர் பிரீமியர் டி20 லீக் போட்டி குஜராத் பந்துவீச்சை தவிடுபொடியாக்கி யு.பி.வாரியர்ஸ் வெற்றி: கிரேஸ்ஹாரிஸ் அபார ஆட்டம்

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யு.பி, வாரியர்ஸ் அணிகள் நேற்றிரவு மோதின. டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹர்லீன் தியோல், 32 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தார்.  மேகனா 24, ஆஷ்லே கார்ட்னர் 25 மற்றும் ஹேமலதா 21 ரன்கள்  எடுத்தனர். முடிவில் குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.பி. வாரியர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் கிரண் நவ்கிரே, 43 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார். 15.4 ஓவர்கள் முடிவில் யு.பி. வாரியர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்து தவித்தது. அப்போது டைம் அவுட் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து  அந்த அணியின் வீராங்கனை கிரேஸ் ஹாரிஸ் அதிரடியில் மிரட்டினார். அவருக்கு சோபி எக்லெஸ்டோனும் நன்றாக கம்பெனி கொடுத்தார். கிரேஸ் ஹாரிஸ் 26 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் எடுத்தார். சோபி எக்லெஸ்டோன். 12 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் யு.பி. வாரியர்ஸ் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 எடுத்து வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் குஜராத் அணி இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இந்தப் போட்டியில் கிரேஸ் ஹாரிஸ் ஆட்ட நாயகி விருது பெற்றார்.

முன்னதாக பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த 2வது லீக் போட்டியில் டெல்லி கேபப்பிடல்ஸ் அணி 60 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது. இந்நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் 4வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Related Stories: