பாஜ உட்கட்சி பூசலால் குழப்பம் திரிபுரா முதல்வரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல்: பிப்லப் குமாருக்கு மீண்டும் வாய்ப்பு?

அகர்தலா: திரிபுரா பாஜ.வில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசலால் முதல்வரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் திரிபுராவிற்கு கடந்த 16ம் தேதி மற்றவைக்கு கடந்த 27ம் தேதியும் தேர்தல் நடத்தப்பட்டது. வாக்குகள் கடந்த 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 32ல் வெற்றி பெற்று பாஜ தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. வரும் 8ம் தேதி புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை நடத்த பாஜ திட்டமிட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ தலைவர் ஜேபி. நட்டா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

தற்போது முதல்வராக உள்ள மாணிக் சகா தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என்று முதலில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் பிப்லப் குமாரும் பதவியை பிடிக்க முயற்சி செய்து வருகிறார். அவரது ஆதரவாளர்கள்  ஒன்றிய உள்துறை இணையமைச்சர் பிரதிமா பவுமிக்கை சந்தித்து பிப்லப் குமாருக்கான தங்களது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். இந்த உட்கட்சி பூசலினால் திரிபுராவில் முதல்வரை தேர்ந்தெடுக்க முடியாமல் பாஜ திணறுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினரிடையேயும் பாஜ வடகிழக்கு மாநில பொறுப்பாளரான அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சகாவுக்கு மீண்டும் முதல்வர் வாய்ப்பு கிடைக்குமா அல்லது முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் மீண்டும் முதல்வராக தேர்ந்தேடுக்கபடுவாரா என்பது விரைவில் தெரிய வரும்.

Related Stories: