களக்காடு பகுதியில் அறுவடை பணிகள் தீவிரம் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி

*விவசாயிகள் கவலை

களக்காடு : களக்காடு பகுதியில் அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வரும் நிலையில் தொடக்கத்திலேயே வாழைத்தார் விலை வீழ்ச்சியடைந்து இருப்பது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள களக்காடு பகுதியில் விளையும் வாழைத்தார்களுக்கு மவுசு அதிகம். கேரள சந்தைகளில் களக்காடு வாழைத்தார்களுக்கு தனி கிராக்கி உள்ளது. இதனால் விவசாயிகள் நெல் சாகுபடி செய்வதை விட வாழைகள் பயிர் செய்வதையே அதிகம் விரும்புகின்றனர்.

இங்கு விளையும் ஏத்தன் ரக வாழைத்தார்கள் சிப்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்கள் செய்ய வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. களக்காடு, மாவடி, மலையடிபுதூர், திருக்குறுங்குடி சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழைகள் பயிர் செய்யப்பட்டுள்ளது. ஏத்தன், ரசகதலி, கதலி, செந்தொழுவன், நாடு உள்ளிட்ட ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் பிப்ரவரி மாதம் முதல் வாழைத்தார் அறுவடை தொடங்கும். இந்தாண்டு பருவம் தவறிய மழையினால் சாகுபடி செய்வதில் காலதாமதமானதால் தற்போது வாழைத்தார் அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.

இதனால், வியாபாரிகள் வயல்களுக்கே நேரில் சென்று எடை போட்டு வாழைத்தார்களை கொள்முதல் செய்து வருகின்றனர். இந்தாண்டு அறுவடைப் பணியில் தொடக்கத்திலேயே ஏத்தன் ரக வாழைத்தார் 1 கிலோ ரூ.17க்கு விற்பனையாகிறது. பொதுவாக சீசன் தொடங்கும் போது 1 கிலோ ரூ.40 வரை விற்பனையாகும். அடுத்த 10 நாட்களில் இருந்து தான் வாழைத்தார் விலை இறங்குமுகமாகும். ஆனால் நடப்பாண்டில் சீசன் தொடக்கத்திலேயே வாழைத்தார் விலை வீழ்ச்சியடைந்திருப்பது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விலை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. ஒரு வாழைத்தாருக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் இருந்து, உரமிடுவது, மருந்து தெளிப்பது, கம்பு கொடுத்து பாதுகாப்பது வரை ரூ.200 வரை செலவு செய்யப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால் செலவழித்ததை விட மிகவும் குறைவாக ரூ.50க்கும் குறைவாக கிடைப்பதால் விவசாயிகளுக்கு செலவழித்த ரூபாய் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வாழை விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்கிற கவலையில் உள்ளனர்.

வாழைத்தார்களுக்கு அரசே விலை நிர்ணயம்

இதுபற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார் கூறும் போது, களக்காட்டில் வாழைத்தார் சந்தை அமைத்து, அரசே நேரடியாக வாழைத்தார்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், அறுவடை காலத்தில் வாழைத்தார்களை சேமித்து வைக்க குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தோம்.

இதனைதொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு படி வேளாண் மற்றும் வணிகத்துறை சார்பில் களக்காடு ஜெ.ஜெ.நகரில் 6 கோடி மதிப்பீட்டில் வாழைத்தார் சந்தை அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் கட்டுமான பணிகள் மந்தமாகவே நடந்து வருகிறது. சந்தை செயல்பாட்டுக்கு வரும் முன்னரே அறுவடை சீசன் முடிந்து விடும். எனவே களக்காடு பகுதியில் அறுவடை செய்யப்படும் வாழைத்தார்களுக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்” என்றார்.

Related Stories: