எத்திராஜ் சாலையில் பெட்டி கடை நடத்த தடை

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு-61 எத்திராஜ் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் ஆதிலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து  மூன்றாவது நபர் மூலம் பங்க் கடையை நடத்தி வந்தார். இந்நிலையில் ஆதிலட்சுமி மற்றும் மூன்றாவது நபருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மீண்டும் ஆதிலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2022ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அதை தொடர்ந்து சென்னை மாநகராட்சிக்கு மனு அளித்து தனது பங்க் கடையை மூன்றாவது நபரிடம் இருந்து மீட்டு தரும்படி கோரியிருந்தார்.

இந்நிலையில்  தீபா என்பவர் தான் எழும்பூர் எத்திராஜ் சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடத்தி வரும் பங்க் கடையை தொடர்ந்து நடத்திடவும் தன்னை இடையூறு செய்ய கூடாது என தெரிவித்து வழக்கு தொடர்ந்தார். மேலும், தீபா ஏற்கனவே நடத்திய கடையின் அருகில் வேறொரு கடையை உண்டாக்கி நடத்தி வந்தார். ஆதிலட்சுமி மற்றும் தீபா தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட ஆணையின்படி இருவருடைய மனுக்களும் பரிசீலனை செய்து நிராகரிக்கப்பட்டு தீர்வு செய்யப்பட்டது. எனவே, விசாரணையின்படி நேற்று முன்தினம் காவல்துறையின் பாதுகாப்புடன் தீபா பங்க் கடை அகற்றப்பட்டது.  

அதே போன்று ஆதிலட்சுமி மூடிவைக்கப்பட்ட பங்க் கடை நேற்று அகற்றப்பட்டது. ஆதிலட்சுமி மற்றும் தீபா எழும்பூர் எத்திராஜ் சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் ஒரே இடத்தில் பங்க் கடை நடத்துவதற்கு முயற்சி செய்வதால் காவல்துறையின் கருத்துரு கோரப்பட்டது.  அதில் காவல்துறையினர் தரப்பில் மேலே தெரிவிக்கப்பட்ட இடத்தில் பங்க் கடை நடத்துவதால் சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, அந்த இடத்தில் பங்க் கடை நடத்துவதற்கு தடை விதிக்கலாம் என்ற நிலை எடுக்கப்பட்டது. இவ்வாறு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: