திருவண்ணாமலை: ‘தேசிய தலைவர்களை முதல்வர் ஒன்றிணைக்க வேண்டும். திமுக-விசிக இடையே விரிசலை ஏற்படுத்தும் கனவு பலிக்காது’ என்று திருமாவளவன் தெரிவித்து உள்ளார். திருவண்ணாமலையில் நேற்று விசிக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை விழ்த்த வேண்டும் என்ற திமுக கூட்டணியின் நிலைப்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது பிறந்த நாள் உரையில் துணிச்சலாக அறிவித்தார்.
அவரது பேச்சு நாட்டை, மக்களை அரசியல் அமைப்பை பாதுகாக்கும் கொள்கை பிரகடனம். எனவே, அதனை விசிக வரவேற்கிறது. திமுக முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்போம். மம்தா பானர்ஜி தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாஜவை எதிர்க்கும் சக்திகளை ஓரணியில் திரட்ட நாடு முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்று பயணம் மேற்கொள்ள வேண்டும். திமுக-விசிக இடையே முரண்பாட்டை ஏற்படுத்தி இடைவெளியை உருவாக்கலாம் என சிலர் செயல்படுகின்றனர். அதற்கு வாய்ப்பில்லை. அவர்களின் கனவு பலிக்காது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.