ஜெனீவாவில் நடந்த ஐ.நா மாநாட்டில் இந்தியாவுக்கு எதிராக பேசிய விஜயப்பிரியா யார்?.. நித்யானந்தா, கைலாசா குறித்து பரபரப்பு தகவல்

வாஷிங்டன்: ஜெனீவாவில் நடந்த ஐ.நா மாநாட்டில் இந்தியாவுக்கு எதிராக நித்தியானந்தாவின் சீடராகிய சாமியார் விஜயப்பிரியா பேசிய கருத்துகள் சர்வதேச ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்தியாவில் சாமியார் நித்யானந்தா மீது கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். தென் அமெரிக்க நாடான ஈக்வடார் மற்றும் டிரினிடாட் அருகே  தீவு ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்த தீவை ‘கைலாசா’ என்ற புதிய நாடாக அறிவித்து, அங்கு தனது ஆதரவாளர்களுடன் வசித்து வருகிறார். கைலாசா தீவின் பெண் சாமியார் விஜயப்ரியா தலைமையிலான தூதுக்குழுவானது கடந்த பிப். 22ம் தேதி ஜெனீவாவில் நடந்த பொருளாதார,  சமூக, பண்பாட்டு உரிமைகள் என்ற தலைப்பிலான ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்றது. இதுதொடர்பான புகைப்படங்களை நித்யானந்தா தனது சமூக வலைத்தள பக்கங்களில் விளம்பரப்படுத்தினார். இந்த மாநாட்டில், இந்தியாவுக்கு எதிரான  கருத்துகளை விஜயப்பிரியா கூறியதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும் விஜயப்பிரியாவின் பேச்சில், ‘எங்களது பரம குருவான  நித்யானந்தாவை இந்தியா துன்புறுத்துகிறது. குரு நித்யானந்தா மற்றும்  கைலாசாவில் வசிக்கும் 20 லட்சம் இந்து மக்கள் மீதான அடக்குமுறையை தடுக்க  சர்வதேச நாடுகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?’ என்று பேசியுள்ளார். விஜயப்பிரியா மட்டுமின்றி கைலாசா லாஸ் ஏஞ்சல்ஸின் தலைவர் முக்திகா  ஆனந்த், செயின்ட் லூயிஸ் தலைவர் சோனா காமத், இங்கிலாந்தின் தலைவர் நித்யா  ஆத்மதாயி, பிரான்ஸின் தலைவர் நித்யா வெங்கடேசனந்தா ஆகிய 5 பெண்களும் அன்றைய  கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

‘கைலாசா’வின் அதிகாரபூர்வ இணைய பக்கங்களை ஆய்வு செய்த போது, பெண் சாமியார் விஜயப்பிரியா ஐ.நா.வுக்கான கைலாச நாட்டின் நிரந்தர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது வீடு அமெரிக்காவின் வாஷிங்டனில் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுடன் சில ஒப்பந்தங்களில் விஜயப்பிரியா கையெழுத்திடும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. கைலாசா நாட்டின் தூதரகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை உலகின் பல நாடுகளில் திறந்துள்ளதாக அந்த வீடியோவில் விஜயப்பிரியா கூறியுள்ளார்.

Related Stories: