போகம்பட்டி ஊராட்சி துணை தலைவர் கோடி கணக்கில் பணம் ஏமாற்றியதால் கொல்ல முயற்சித்தோம்-கைதானவர்கள் பகீர் வாக்குமூலம்

சூலூர் : சூலூர் அருகே போகம்பட்டி ஊராட்சி துணை தலைவர் ராஜ்குமாரை கொலை செய்ய முயன்ற வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், சூலூர் போகம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜ்குமார் கடந்த 13ம் தேதி மர்ம நபர்களால் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டார். அவருடன் அவரது மனைவி மற்றும் உறவினர் உட்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு மற்றும் கத்தி குத்து காயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து புகாரின் பேரில் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். ராஜ்குமாரின் மைத்துனர், நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக கூறியதன் பேரில் பணம் டெபாசிட் செய்து பறிகொடுத்தவர்கள் இந்த சம்பவத்தை செய்திருக்கலாம் என போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், சூலூர் கலங்கல் பாதை பகுதியில் நேற்று காலை வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.  

அதில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் இருந்த 4 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களை உடனடியாக காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 4 பேரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராமன் மகன் அருண் (35), முத்துமணி மகன் சரவணன்(43), பாலகுரு மகன் கருப்பசாமி (38) மற்றும்  முத்துராஜா மகன் முத்துக்குமார் (30) என தெரியவந்தது.இவர்கள் நான்கு பேரும் ராஜ்குமாரை தாக்கிய வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரிய வந்த நிலையில் அவர்களிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்தனர்.

கைதானவர்கள் அளித்த வாக்கு மூலம் வருமாறு :  அருண், சரவணன், கருப்பசாமி ஆகியோர் ஊரில் உள்ள பல்வேறு பிரமுகர்களிடம் சுமார் ரூ.5 கோடி பணம் வசூலித்து ராஜகுமாரின் மைத்துனர் கௌதம் ரமேஷ் நடத்திய நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்தனர்.

இந்நிலையில் ரமேஷ் எங்களை ஏமாற்றிவிட்டு தலைமறைவானார். அவர் மீது புகார் கொடுத்தும் காவல் துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவரை பழி வாங்கும் எண்ணத்தில் கடந்த இரண்டு மாதங்களாக  ரமேஷ் குடும்பத்தினரை  தேடி வந்தோம்.  எங்களை ஏமாற்றிய கௌதம் ரமேஷின் அக்கா மற்றும் மாமா சூலூர் பாப்பம்பட்டி பகுதியில் வசித்து வருவதாக தகவல் தெரிந்தது. அதன் பேரில் தொடர்ந்து ஒரு வார காலம் அந்தப் பகுதியில் நோட்டமிட்டு ராஜகுமாரின் வீட்டை கண்டுபிடித்தோம்.

முதலில் சுமூகமாக பேசி எங்கள் பணத்தை கொடுத்து விடுமாறு கேட்டோம். ஆனால் அவர் தனக்கும் தனது மைத்துனருக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் தயாராக கொண்டு வந்திருந்த அரிவாளால் ராஜ்குமாரை வெட்டினோம். ஆத்திரம் தீராததால் அவரது மனைவி மற்றும் உறவினரை வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டோம் என   தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் கைது செய்யப்பட்ட 2 பேர் மீது கொலை முயற்சி வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது. கைதானவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளை கைப்பற்றிய போலீசார் அவர்களை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: