திருப்பதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நன்கொடையாளர்கள் வழங்கிய 75 புதிய பேரிகார்டுகள், நிறுத்த பலகைகள்-போலீசாரிடம் எஸ்பி ஒப்படைத்தார்

திருப்பதி :  திருப்பதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக நன்கொடையாளர்கள் வழங்கிய 75 புதிய பேரிகார்டுகள், நிறுத்த பலகைகளை எஸ்பி பரமேஸ்வர ரெட்டி போலீசாரிடம் ஒப்படைத்தார். திருப்பதியில்  போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக நன்கொடையாளர்கள் வழங்கிய 75 புதிய பேரிகார்டுகள் மற்றும் நிறுத்த பலகைகளை திருப்பதி போக்குவரத்து போலீசாரிடம் வழங்கும் நிகழ்ச்சி எம் ஆர் பள்ளியில் உள்ள காவல்துறை பயிற்சி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட எஸ்பி  பரமேஸ்வர ரெட்டி கலந்து கொண்டு புதிய பேரிகார்டுகள் மற்றும் நிறுத்த பலகைகளை போலீசாரிடம் ஒப்படைத்து பேசியதாவது:

திருப்பதி நகரம் நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் வேளையில், மக்கள் தொகையும், வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

திருப்பதி புண்ணிய ஸ்தலமாக இருப்பதால், திருமலைக்கு வழக்கமாக வரும் பக்தர்களின் வாகன எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 20,000 வாகனங்கள் வந்து செல்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் திருப்பதி நகரப் போக்குவரத்தை நிர்வகிப்பதும் கட்டுப்படுத்துவதும் மிகவும் கடினமாகி வருகிறது. போக்குவரத்து நிர்வாகத்தின் ஒரு பகுதியாக, திருப்பதியில் போக்குவரத்து சிக்னல்கள், தடுப்புகள் மற்றும் பிற அமைப்புகளை காவல் துறையினர் மாநகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் இணைந்து மேம்படுத்தி, சீரான போக்குவரத்தை உறுதிசெய்ய அவர்களுடன் ஒருங்கிணைத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, திருப்பதி நகரத்தில் ₹7 லட்சம் மதிப்பிலான 75 புதிய இரும்பு தடுப்புகள் மற்றும் நிறுத்த பலகைகளை திருப்பதியில் உள்ள முன்னணி நிறுவனத்தினர் சமூக பொறுப்புடன் நன்கொடை வழங்கியது வரவேற்கத்தக்கது. இவை நாளை(இன்று) முதல் பயன்பாட்டிற்கு வரும். திருப்பதி நகரில் போக்குவரத்து நிர்வாகம் சிறப்பாக செயல்படும்.  முக்கிய சந்திப்புகள், சிக்னல்கள், ஒருவழிச் சாலைகளில் பயன்படுத்தினால் விபத்துகள் தடுக்கப்படும்.

திருப்பதி நகரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக  நன்கொடையாளர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து சேவை உணர்வோடு முன்வருவதால், காவல்துறை மேலும் பொறுப்புடன் மக்களுக்குச் சேவையாற்ற உத்வேகம் அளிக்கும் என்று கூறினார் நிகழ்ச்சியில் சட்டம்-ஒழுங்கு கூடுதல் எஸ்பி குலசேகர், போக்குவரத்து டிஎஸ்பிக்கள் கடமராஜு, விஜயசேகர், போக்குவரத்து சிஐ பாஸ்கர் ரெட்டி, போக்குவரத்து எஸ்ஐக்கள், போக்குவரத்து காவல் நிலைய ஊழியர்கள், அந்தந்த அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.

Related Stories: