நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகளிர் திட்டத்தில் நடைபெறும் பணிகள்-அரசு செயலாளர் ஆய்வு

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட சாமாந்தான் பேட்டையில் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் குறித்தும், மகளிர் வாழ்வாதார சேவை மைய பணிகள் குறித்தும் வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடனும், சமூக தொழில்சார் வல்லுநர்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்ராய் கலந்துரையாடினார்.

இதை தொடர்ந்து கீழ்வேளுர் வட்டார வள மைய அலுவலகத்தில் மகளிர் திட்ட உதவிதிட்ட அலுவலர்கள் திட்டம் சார்ந்து ஆய்வு மேற்கொண்டார். வட்டார வள மைய அலுவலக பணியாளர்களின் பணி குறித்தும், சமுதாய வள பயிற்றுனர்கள், கண்காணிப்பாளர்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள், சுய உதவி குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும், மகளிர் திட்டம் சார்ந்த பயன்பாடுகள் குறித்தும் கலந்து ஆலோசித்து அறிவுரை வழங்கினார்.

திருமகள் மகளிர் சுய உதவிக் குழுவினை சார்ந்த ரேகா சுய தொழில் வங்கி கடன் திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் கடன் உதவி பெற்று நடத்தி வரும் கரும்புச்சாறு விற்பனை நிலையத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை மூலம் நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ரூ.7.90 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்ராய் ஆய்வு மேற்கொண்டார். கலெக்டர் அருண்தம்புராஜ், கூடுதல் ஆட்சியர் பிரதிவிராஜ். டிஆர்ஓ ஷகிலா, சார் ஆட்சியர் பானோத்ம்ருகேந்தாலால், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) முருகேசன் மற்றும் பலர் கலந்து உடனிருந்தனர்.

Related Stories: