ஒடிசாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு ரயில்களில் தொடர்ந்து கஞ்சா கடத்திய முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

* பெங்களூரில் சுற்றி வளைத்து மடக்கியது தனிப்படை

* டூவீலர் பார்க்கிங் ரசீது மூலம் துப்பு துலங்கியது

சேலம் :  ஒடிசா மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு ரயில்கள் மூலம் கஞ்சா கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. இதனை தடுக்க தமிழக ரயில்வே போலீசில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஒடிசா, ஆந்திரா வழியே வரும் அனைத்து ரயில்களிலும் சோதனையிடப்பட்டு வருகிறது. இச்சோதனையில் கஞ்சா கடத்தி வரும் நபர்களை கைது செய்கின்றனர். பல நேரங்களில் கஞ்சா கடத்தி வரும் நபர்கள், போலீஸ் சோதனையை பார்த்ததும் அப்படியே கஞ்சாவை போட்டுவிட்டு தப்பி விடுகின்றனர்.

சேலம் ரயில்வே உட்கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, ஓசூர், காட்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய 5 ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் எல்லைப்பகுதியில் ரயில்களில் கஞ்சா கடத்தி வரும் கும்பலை கூண்டோடு கைது செய்ய டிஎஸ்பி குணசேகரன் தனிப்படையை அமைத்துள்ளார். இத்தனிப்படையினர், பல நேரங்களில் கஞ்சாவை போட்டுவிட்டு தப்பிய குற்றவாளிகளை பிடிக்க தீவிரம் காட்டியுள்ளனர்.

இந்தவகையில், சேலம் ரயில்வே போலீஸ் தனிப்படையினரின் சோதனையில் சிக்கிய கஞ்சா பார்சல்களுடன் ஒரு டூவீலர் பார்க்கிங் ரசீது சிக்கியது. அதனை வைத்துக் கொண்டு சிறப்பு எஸ்ஐக்கள் பாலமுருகன், ரமேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூரு சென்றனர். அங்கு பையப்பனஹள்ளி பகுதியில் உள்ள பார்க்கிங் ஸ்டேண்டுக்கு சென்று சம்பந்தப்பட்ட பைக்கை கண்டறிந்தனர். தொடர்ந்து, அதனை நிறுத்திச் சென்றவர்கள் யார் என துப்பு துலக்கினர். அதில், சேலத்திற்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த முக்கிய குற்றவாளிகளான பெங்களூரு லக்கேரி நஞ்சுண்டேஸ்வரிதெருவை சேர்ந்த பசுவராஜ் (34), பெங்களூரு தெற்கு ஜெயநகர் கே.எம்.காலனியை சேர்ந்த இஜாஸ் பாட்ஷா (42) ஆகிய இருவர் என கண்டறிந்து, பெங்களூரு வில்சன்கார்டன் போலீசார் உதவியுடன் பெங்களூரில் வைத்து மடக்கி பிடித்தனர்.

சிக்கிய பசுவராஜ் உணவு டெலிவரிபாயாக வேலை பார்த்துக் கொண்டு, அவ்வப்போது ஒடிசா சென்று அங்குள்ள பெளங்கீர் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து பெங்களூரு மற்றும் தமிழ்நாட்டிற்கு கடத்தி விற்பனை செய்து வந்துள்ளார். அதேபோல் இஜாஸ் பாட்ஷா, ஆட்டோ டிரைவர் வேலை பார்த்துக் கொண்டு ஒடிசா சென்று கஞ்சா வாங்கி வந்து தமிழ்நாட்டில் உள்ள சில புரோக்கர்களிடம் கொடுத்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கூட்டாளிகள் ஆவர்.

ஒன்றாக ஒடிசா செல்வதோடு, அங்கிருந்து ஒரு கிலோ கஞ்சாவை ₹5 ஆயிரத்திற்கு வாங்கிக் கொண்டு இங்கு வந்து 10 கிராம் எடையில் சிறிய சிறிய பொட்டலாமாக ₹200க்கு விற்பனை செய்து வந்துள்ளனர். பெங்களூரு கலாசிபாளையம் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடமும், தமிழ்நாட்டில் உள்ள கஞ்சா வியாபாரிகளிமும் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

கைதான பசுவராஜ், இஜாஸ் பாட்ஷா ஆகிய இருவரையும் சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் கஞ்சா விற்பனை செய்யப்பட்டது என போலீசார் விசாரித்தனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: