புதுவை, காரைக்கால் பகுதிகளில் தனியார் வங்கி பெயரில் குறுந்தகவல் அனுப்பி மோசடி-சைபர் க்ரைம் எச்சரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்காலில் பொதுமக்களுக்கு தனியார்  வங்கி  பெயரில் குறுந்தகவல் அனுப்பி பண மோசடியில் மர்ம நபர்கள்  இறங்கியுள்ளதால்  பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு சைபர் க்ரைம்  எச்சரித்துள்ளது.  புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டுகளில் ஆன்லைன்  மோசடி வழக்குகள் அதிகரித்து  விட்டன. இந்த மோசடியில் ஏழை விவசாயி முதல்  தொழிலதிபர்கள் வரை அனைத்து  தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ.10  ஆயிரம் முதல் கோடிக்கணக்கில்  சமூக வலைதள மோசடிகளில் பணத்தை இழந்தவர்கள்  இதுபற்றி சைபர் க்ரைம் காவல்  நிலையத்தில் ஆன்லைன் மூலமாக புகார்களை அனுப்பி  நடவடிக்கை எடுக்குமாறு  கூறியிருந்தனர்.

 அங்கு ஆன்லைன் மோசடி புகார்கள்  அதிகரிக்கவே, ரூ.1  லட்சத்துக்கும் குறைவான மோசடி வழக்குகளை அந்தந்த காவல்  நிலையங்களே  வழக்குகளை பதிவு செய்து, நடவடிக்கை  எடுக்க உத்தரவிட்டது. இருப்பினும்  ஆன்லைன் மோசடிகள்  குறைந்தபாடில்லை. மாதந்தோறும் 10, 15 மோசடி புகார்கள்  மீது வழக்குகள்  பதிவாகி வருகின்றன. இதற்கிடையே தனியார் வங்கிகளில்  இருந்து உங்களது  ஆன்லைன் வங்கி சேவை முடக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் பான்  கார்டு விபரங்களை  புதுப்பிக்க வேண்டும். அதற்கு கீழ்க்காணும் லிங்க்கை  கிளிக்  செய்யுங்கள், என்ற மெசேஜ் தற்போது தனியார் வங்கியில் கணக்கு   வைத்திருக்கும் பெரும்பாலான நபர்களுக்கு மர்ம நபர்களால் அனுப்பப்படுகிறது.

 அப்பாவி மக்களை குறி வைத்து சமூக வலைதள  ஆன்லைன் மோசடி கும்பலால் இந்த தகவல்  அனுப்பப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் யாரும் எஸ்எம்எஸ்-ல்  வருகின்ற லிங்க்  தொடர்பாக முகவரியை ஓப்பன் செய்ய வேண்டாம் என புதுச்சேரி சைபர் பிரிவு  போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை  விடுத்துள்ளனர். மேலும் லிங்க்கை  திறந்தால், வங்கி கணக்கு விபரம், பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்கள் உங்கள்  தொலைபேசியில் இருந்து மர்மநபர்களால் திருடப்படும். இதன்மூலம் வங்கி கணக்கை  ஹேக் செய்து, அதிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். எனவே  புதுச்சேரி,  காரைக்காலில் வசிப்பவர்களக்கு இதுபோன்று வரும் குறுந்தகவல் மீது  உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

20 செல்போன்கள் மீட்பு

புதுவையில்   தங்களது செல்போன் திருட்டு போனது தொடர்பாக சைபர் க்ரைம் காவல்   நிலையத்தில் ஏராளமான புகார்கள் குவிந்துள்ள நிலையில், அதன் மீது தொடர் விசாரணை   நடத்தி வரும் போலீசார், அவற்றை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து   வருகின்றனர். அதன்படி நேற்று 20க்கும் மேற்பட்ட செல்போன்கள் மீட்கப்பட்டது.    இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் அவற்றின்  உரிமையாளர்களை  வரவழைத்து முறைப்படி ஒப்படைத்தனர். தவறவிட்ட, திருட்டு போன  செல்போன்களை  மீட்டுத்தந்த சைபர் க்ரைம் போலீசாருக்கு பொதுமக்கள் நன்றி  தெரிவித்துக்கொண்டனர்.

Related Stories: