நண்பர்களுடன் குளிக்க சென்றபோது அணையில் மூழ்கி வாலிபர் பரிதாப பலி-நாட்றம்பள்ளி அருகே சோகம்

நாட்றம்பள்ளி :  நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் செட்டேரி அணையில் குளிக்க சென்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட செட்டேரி அணையில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதில், அப்பகுதி மக்கள்,  இளைஞர்கள் தினசரி மீன் பிடிப்பது மற்றும் குளித்து கொண்டும் வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று கவுண்டனூர் பகுதியை சேர்ந்த காந்தி மகன் சிங்காரம்(33) கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.  இவர் நேற்று செட்டேரி டேமில்  நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது, டேமின் நடுப்பகுதிக்கு நீச்சல் அடித்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதை கண்ட அருகில் இருந்த  இளைஞர்கள் நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையிடம் தகவல் தெரிவித்து, அங்கிருந்து சென்றுள்ளனர்.

தகவலின் பேரில் நாட்றம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் கலைமணி தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய சிங்காரத்தினை தேடினர். தொடர்ந்து 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு  சிங்காரத்தின் சடலத்தை தீயணைப்புத்துறையினர் மீட்டு நாட்றம்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். பின்னர், போலீசார் சடலத்தை  பிரேத பரிசோதனைக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில், இதுகுறித்து தகவலறிந்த நாட்றம்பள்ளி தாசில்தார் குமார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினார்.

Related Stories: