தீவு நகரத்தை தேசத்துடன் இணைத்த தூண்களுக்கு பிரியாவிடை 109 வயது பாம்பன் பாலத்துக்கு ஓய்வு: புயலையும் தாங்கிய வலிமை

நாட்டின் மிக முக்கிய புனிதத்தலங்களில் ஒன்று ராமேஸ்வரம். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்தத் தீவு நகரத்தை, தேசத்தின் பிற பகுதிகளுடன் இணைப்பவை பாம்பன் கடலில் அமைக்கப்பட்ட பிரமாண்ட ரயில் மற்றும் பஸ் பாலங்கள். ராமேஸ்வரத்திற்கு சாலை மார்க்கமாக வாகனங்கள் செல்ல பாலம் அமைப்பதற்கு முன்பு ரயிலில் மட்டுமே பக்தர்கள் சென்றடைய இயலும். அதற்கு மிகப்பெரும் உதவியாக இருந்தது பாம்பன் கடலில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ரயில் பாலம். இந்த ரயில் பாலம் 109 ஆண்டு உழைப்பிற்கு பின் தற்போது ஓய்வு பெற்றுள்ளது. பாக் ஜலசந்தி - மன்னார் வளைகுடா கடலை இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ஆங்கிலேயர் ஆட்சியில் முதல் ரயில் பாலம் கட்டப்பட்டது. இக்கடலில் இயற்கையாக ஓடை போல் அமைந்திருந்த பாம்பன் கால்வாயை ஆங்கிலேயர்கள் 80 அடி அகலம், 14 அடி ஆழத்தில் 4,400 அடி நீளத்திற்கு கடலுக்குள் மணலை தோண்டி விரிவுபடுத்தினர்.

இதில் அதிகபட்சம் 200 டன் எடையுள்ள சிறிய ரக வணிக மற்றும் போர்க்கப்பல்கள் சென்று வந்தது. 1876ம் ஆண்டு இந்தியா - இலங்கை இடையே கடல்சார் வணிக போக்குவரத்தை மேம்படுத்த திட்டமிட்ட ஆங்கிலேய அரசு, தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தை ஏற்படுத்த முடிவு செய்தது. இதனால் பாம்பன் கால்வாயில் கப்பல்கள் செல்லும் வகையில் ரயில் பாலம் அமைக்க முடிவானது. ஆங்கிலேய ஜெனரல் மன்றோ மற்றும் டெபுடி ஜெனரல் ரைட்சன் ஆகியோரால் இதற்கான முழுமையாக ஆய்வுகள் நடத்தப்பட்டு 1899ல் பாம்பன் கடலில் மேலே ரயில் கீழே கால்வாயில் கப்பல்கள் செல்லும் வகையிலான பாலம் கட்ட முடிவானது. 1902ம் ஆண்டு பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டது. இதற்கான கட்டுமான பொருட்கள் அனைத்தும் இங்கிலாந்தில் இருந்து கப்பலில் சென்னை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சிறிய சரக்கு கப்பல்கள் மூலம் மண்டபம் வந்து சேர்ந்தது.

இதே வேளையில் மானாமதுரையில் இருந்து பாம்பன் வழியாக தனுஷ்கோடிக்கு ரயில் பாதை, தனுஷ்கோடி மற்றும் இலங்கை தலைமன்னாரில் கப்பல் துறைமுகம் அமைக்கும் பணிகளும் நடைபெற்றது. கப்பல்கள் கடந்து செல்லும்போது திறந்து வழி விடும் ஷெர்ஜர் டபுள் லீப் கேண்டிலீவர் தூக்கு பாலத்துடன் கூடிய பாம்பன் ரயில் பாலத்தின் பணிகள் 1913 டிசம்பரில் நிறைவு பெற்றது. தொடர்ந்து 1914ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி இந்த பாலத்தில் ரயில் போக்குவரத்தும், இதே நாளில் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தும் துவங்கியது. பாம்பன் பாலத்தில் இருந்த மீட்டர்கேஜ் ரயில் பாதை 2007ம் ஆண்டில் அகலப்பாதையாக மாற்றப்பட்டது. இதையடுத்து மதுரை - ராமேஸ்வரம் இடையே அகல ரயில் போக்குவரத்து துவங்கியதுடன், வெளிமாநிலங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நீண்ட தூர விரைவு ரயில்கள் இயக்கப்பட்டன. பாம்பன் பாலத்தை கட்டமைத்த ஆங்கிலேய பொறியாளர்கள் அப்போது 100 ஆண்டு உத்தரவாதத்தை வழங்கியிருந்தனர்.

ஆனால் அந்த காலகட்டத்தையும் கடந்து, பல்வேறு தொழில்நுட்ப பிரச்னைகளையும் சந்தித்து ரயில் போக்குவரத்தில் தனது பங்களிப்பை வழங்கி வந்த பாம்பன் பாலம், 109 ஆண்டுகளுக்குப் பின் தனது சேவையை நிறுத்திக்கொண்டுள்ளது. கடந்த ஜனவரி மாத துவக்கத்தில் கப்பல் செல்ல திறந்து வழி விடும் ஷெர்ஜர் தூக்கு பாலத்தில் அதிக அளவில் அதிர்வுகள் ஏற்பட்ட நிலையில், சென்சார் கருவி எச்சரிக்கை செய்தது. தொடர்ந்து பாலத்தில் ரயில் செல்வது நிறுத்தப்பட்டது. சென்னை ஐஐடி தொழில்நுட்ப வல்லுனர்கள், ரயில்வே பொறியாளர்கள் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னையை சரி செய்ய முயற்சித்தனர். ஆனாலும், பாலத்தில் ரயில் இயக்கினால் விபத்து ஏற்படும் சூழல் உருவாகும் என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, நூற்றாண்டு கடந்த பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாகவும், முழுமையாக ஓய்வு கொடுககப்பட்டதாகவும் ரயில்வே நிர்வாகம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

பாம்பன் கடலில் புதிய இரட்டை மின் வழித்தட ரயில் பாலம் கட்டுவதற்காக ஒன்றிய அரசு ₹350 கோடி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், புதிய பாலம் கட்டும் பணி 2019ம் ஆண்டு இறுதியில் துவங்கியது. கொரோனா ஊரடங்கின்போது நிறுத்தப்பட்ட பணிகள், மீண்டும் 2022ல் துவங்கி நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தனுஷ்கோடியில் ரயில் நிலையம் கட்டுவதுடன், ரயில் போக்குவரத்துக்கு பாதை அமைப்பது, ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை விரிவுபடுத்தி, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது போன்ற பணிகளும் விரைவில் துவங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே மானாமதுரை - ராமேஸ்வரம் இடையே மின்சார ரயில்களை இயக்குவதற்கான கட்டமைப்பு வேலைகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவுபெற்று, புதிய பாம்பன் ரயில் பாலம் வழியாக ராமேஸ்வரத்திற்கு மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை ராமேஸ்வரம் நோக்கி வரும் ரயில்களின் பயணம் மண்டபம் மற்றும் ராமநாதபுரத்துடன் நிறைவடையும்.

*  ரயில் பயணங்கள் இனி மண்டபம் வரையே... n இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய பாலம் தயார்?

* பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்ட காலம் முதல் பல்வேறு காரணங்களால் ரயில் இயக்குவது வாரக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 1964ல் வீசிய தனுஷ்கோடி புயலின் போது ஷெர்ஜர் தூக்கு பாலம் தவிர ரயில் பாலத்தின் மற்ற பகுதிகள் அனைத்தும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது. இதனால் இரண்டு மாதம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பாலத்தில் சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் ரயில் இயக்கப்பட்டது.

* l 2007ம் ஆண்டு மதுரை - ராமேஸ்வரம் அகல ரயில் பாதை திட்டத்திற்காக ஓராண்டுக்கும் மேலாக பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

* l 2012 ல் இந்திய கடற்படை எண்ணெய் கப்பல் பாம்பன் பாலத்தில் மோதி 121ம் தூண் சேதமடைந்த நிலையில், பல நாட்கள் ரயில் இயக்கப்படவில்லை.

* l 2018ம் ஆண்டு தூக்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் ஒரு மாதத்திற்கும் மேல் ரயில் சேவை தடைபட்டது.

*  கொரோனா ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டபோது, பாம்பன் பாலம் நீண்டநாள் ஓய்வெடுத்தது.

* யார் இந்த ஷெர்ஜர்?

பாம்பன் - மண்டபம் இடையே கடலில் 2,065 மீட்டர் நீளத்தில், 144 தூண்களின் மேல் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 41 அடி உயரத்தில், 124 அடி ஆழத்தில் இரண்டு ராட்சத தூண்களின் மேல் கப்பல் செல்லும் போது திறந்து வழி விடும் டபுள் கேண்டி லீவர் தூக்கு பாலம் கட்டப்பட்டது. இதன் மீது ரயில் செல்லும் போது தாங்கும் வகையில் 450 டன் எடையில் தூக்கு பாலம் அமைந்துள்ளது. இதன் நான்கு முனைகளில் இணைக்கப்பட்டுள்ள சுழலும் சக்கரங்கள் சுற்றும்போது இரண்டு பக்கமும் தூக்கு பாலம் திறந்து கப்பல் செல்ல வழி விடும்.

மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியதும் ரயில்கள் செல்லும். இதனை வடிவமைத்து கட்டிக்கொடுத்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த இன்ஜினியர் ஷெர்ஜர் பெயரிலேயே தூக்கு பாலம் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த வடிவமைப்பில் இந்தியாவில் பாம்பன் மற்றும் இங்கிலாந்தில் ஒன்று என இரு பாலங்கள் மட்டுமே கட்டப்பட்டது. இங்கிலாந்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த பாலம் அகற்றப்பட்டுவிட்டது. பாம்பன் கடலில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் காற்றடித்தால் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கை மணி அடிப்பதுடன், சிக்னல் கொடுக்காமல் ரயில் செல்ல தடை ஏற்படுத்தும் தானியங்கி கருவி வசதியும் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் புயல், பலத்த காற்று காலத்தில் முன்னெச்சரிக்கையாக பாலத்தில் ரயில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு நிலைமை சீரானதும் ரயில் செல்லும் நிலை இருந்தது.

Related Stories: