திருப்பதி உள்ளிட்ட இடங்களில் கைவரிசை செயின் பறிப்பு, பைக் திருட்டு வழக்கில் 3 பேர் அதிரடி கைது

*₹13 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

திருப்பதி : திருப்பதி, திருச்சானூர், சந்திரகிரி, நாயுடுபேட்டையில் கைவரிசை காட்டிய செயின் பறிப்பு, பைக் திருட்டு வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ₹13 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பதியில் உள்ள குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கூடுதல் எஸ்பி விமலாகுமாரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த 3 மாதங்களாக திருப்பதியை சுற்றி தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக, எஸ்பி பரமேஸ்வர் உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு டிஎஸ்பி சுரேஷ், இன்ஸ்பெக்டர்கள் தோரா, நிவாஸ் ஆகியோர் தலைமையிலான  குழுவினர் பழைய குற்றவாளிகளை வேவு பார்த்தனர்.

இந்நிலையில்,  அலிபிரி சார்லோபள்ளி பைபாஸ் சாலையில் பாரதிய வித்யா பவன் சாலையில் பழைய குற்றவாளிகளான  சம்பத், ஜெகதீஷ், சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில், கடந்த 2020ம் ஆண்டு கொல்லவாணிகுண்டா இந்திரா பிரியதர்சினி மார்க்கெட், சந்திரகிரி, சிகுருவாடு வடக்கு கண்டரிகாவில் வீடு புகுந்து திருடியது, அலிபிரி பஸ் ஸ்டாண்டில் பைக் திருட்டு உள்ளிட்டவைகளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து ₹13 லட்சத்து 23 ஆயிரத்து 500 மதிப்பிலான 225 கிராம் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி பொருட்கள், ₹30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக திருப்பதி, திருச்சானூர், சந்திரகிரி, நாயுடுபேட்டை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு சிறைக்கு சென்று ஜாமீனில் வந்து மீண்டும் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது முத்தியாலாரெட்டிப்பள்ளி, திருச்சானூர், சந்திரகிரி ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பத் மீது பீலேரு காவல் நிலையத்தில் பலாத்கார முயற்சி வழக்கும் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Related Stories: