டோக்கியோ : ராக்கெட்டுகளில் மக்களை விண்வெளிக்கு அனுப்பும் சுற்றுலா திட்டங்களில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி வரக்கூடிய நிலையில், நவீன பலூன்கள் மூலம் மக்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் புதிய தொழில்நுட்பத்தில் ஜப்பான் வெற்றி பெற்றுள்ளது. இதனால் குறைந்த செலவில் மக்கள் விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம் என்கிறார்கள் ஜப்பான் விண்வெளி நிபுணர்கள். ஜப்பானின் ஐவாயா நிறுவனம் பலூன்கள் மூலம் மக்களை விண்வெளி சுற்றுலா அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளது. பூமியின் வளைவை தெளிவாகக் காணக்கூடிய 25 கிமீ உயரம் வரை பறக்கும் திறன் கொண்ட காற்று புகாத 2 இருக்கை உள்ள பலூன் கேபினை ஐவாயா நிறுவனம் உருவாக்கியுள்ளது.