15 ஆண்டுகளை நிறைவு செய்த ஐபிஎல் தொடர்: சாதித்த ரோகித், கோஹ்லி, டிவில்லியர்ஸ், ரசலுக்கு விருது.! பும்ரா, நரேனுக்கும் பாராட்டு

மும்பை:ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உருவாக்கியுள்ள `Incredible Premier League awards’ விருதுகள் ரோகித் சர்மா, விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ், ஆண்ட்ரே ரசல் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகளவில் புகழ் கொண்ட விளையாட்டு தொடர்களில் ஐபிஎல்-க்கு முக்கிய இடம் உண்டு. ஐபிஎல் தொடர்களை பார்த்து அனைத்து நாடுகளும் இன்று தங்களது உள்நாட்டு தொடர்களை நடத்தி வருகின்றனர். இன்று ஐபிஎல் தொடரின் மதிப்பு பல்லாயிரம் கோடிகளை தாண்டி சென்றுள்ளது. இதனால் சர்வதேச கிரிக்கெட் அட்டவணைகளில் ஐபிஎல்லுக்கென தனி இடத்தை கேட்டு பெறும் அளவிற்கு பிசிசிஐ உயர்ந்துள்ளது. இப்படிப்பட்ட ஐபிஎல் தொடர் கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதியன்று தொடங்கப்பட்டது. இந்த முறை 15வது சீசன் போட்டிகள் நடைபெறவுள்ளன.

அதற்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி வரும் மார்ச் 31ம் தேதி போட்டிகள் தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமே பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்த 15 ஆண்டு கால சாதனையை கொண்டாட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், Incredible Premier League awards என்ற பெயரில் விருதுகளை வழங்கியுள்ளது. அதன்படி சிறந்த கேப்டனாக மும்பை இந்தியன்ஸின் ரோகித் சர்மா தேர்வாகியுள்ளார். 5 முறை கோப்பையை வென்றுக்கொடுத்ததால் டோனியை முந்தி ரோகித் பெற்றிருக்கிறார். சிறந்த பேட்ஸ்மேனுக்கான விருது ஏபி.டிவில்லியர்ஸுக்கு தரப்பட்டுள்ளது.

ஆர்சிபி அணிக்காக அவர் ஆடிய சிறப்பான இன்னிங்சை சுட்டிக்காட்டி தந்துள்ளனர். சிறந்த பவுலராக மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஒரு சீசனில் சிறப்பாக செயல்பட்ட பேட்ஸ்மேனாக விராட் கோஹ்லி தேர்வாகியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டில் விராட் கோஹ்லி 973 ரன்களை விளாசினார். இதில் 4 சதங்களும் அடங்கும். ஒரே சீசனில் சிறப்பாக செயல்பட்ட பவுலராக சுனில் நரேன் தேர்வாகியுள்ளார். 2012ம் ஆண்டு சுனில் நரேன் அறிமுகமான முதல் சீசனிலேயே 15 இன்னிங்ஸ்களில் 24 விக்கெட்களை அள்ளினார். இதனால் கொல்கத்தா தனது முதல் கோப்பையை வென்றது. ஆண்ட்ரே ரசல் ஒட்டுமொத்தமாக சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் என்ற விருதை பெறுகிறார். கொல்கத்தா அணிக்காக அவர் ஏற்படுத்திய தாக்கத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் ஷேன் வாட்சன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் புள்ளிகள் வித்தியாசத்தில் ரசல் தட்டிச் சென்றுள்ளார்.

Related Stories: