தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு எளிதாக தப்புவதை தடுக்க வடமாநில தொழிலாளர்கள் விவரங்களை காவல்துறை மூலம் சேகரிக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

திருவள்ளூர்,  பிப்.21: இந்தியாவில் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து  முன்னேறி வருவதால் இங்கு வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனை பயன்படுத்திக்கொள்ள இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருகின்றனர். வட மாநிலங்களில்  இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப அங்கு அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லாததாலும், அங்கு குறைவாக ஊதியம் கிடைப்பதாலும் பொருளாதார ரீதியில் வளர்ந்து  வரும் தமிழ்நாட்டில் தொழில் துறைக்கு போதிய அளவு ஆட்கள் இல்லாததாலும், வட  மாநிலத்தை சேர்ந்தவர்கள் 100க்கும் மேற்பட்டோர் வேலை தேடி தினம் தினம் ரயில்கள் மூலம்  தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பீகார், ஒடிசா, மேற்குவங்காளம், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம், டெல்லி என  பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருப்பூர் என  பல்வேறு பகுதிகளில் தங்கி, ஏற்றுமதி நிறுவனங்கள், கட்டிட வேலை, ஓட்டல்கள், டீக்கடை, பாஸ்ட்  புட், தள்ளுவண்டி கடைகள், பஞ்சர் கடைகள், சாலை ஓரத்தில் அத்தியாவசிய  பொருட்கள் விற்பனை, முடித்திருத்தகம், பியூட்டி பார்லர், சாலைப்பணி, விவசாயம் என பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால்,  நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளிகளின் எண்ணிக்கை  அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு  வேலைவாய்ப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. காரணம் தமிழ்நாட்டை  சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாங்கும் சம்பளத் தொகையில் பாதி  தொகையை தான் வடமாநில தொழிலாளிகள் பெற்று கொள்கின்றனர். பாதி தொகையை  சம்பளமாக பெற்றுக் கொண்டாலும், அவர்கள் அதிகப்படியான நேரம் வேலை  செய்கின்றனர். இது கட்டுமான மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு லாபத்தை  கொடுக்கிறது. இவ்வாறு அதிகப்படியான லாபம் கிடைப்பதினால் கட்டுமான  மற்றும் தொழில் நிறுவனங்களை சேர்ந்த முதலாளிகள் வடமாநில தொழிலாளிகளையே  பெரும்பாலும் பணிகளில் வைக்கின்றனர். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில்  நடைபெறும் ரயில்வே கட்டுமான பணிகள், மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள், மேம்பால  கட்டுமான பணிகள், அரசு அலுவலக கட்டுமான பணிகள் போன்றவற்றிலும்  பெரும்பாலும் வட மாநில தொழிலாளர்கள் தான் பணியாற்றி வருகின்றனர்.

இவ்வாறு  தமிழகம் முழுவதும் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து தொழில்களிலும்  வடமாநிலத்தவர்கள் பரவி விட்டனர். இதனால், வடமாநில தொழிலாளிகளால் தான்  தமிழர்களுக்கு வேலை கிடைக்கவில்லை எனவும், வட மாநில தொழிலாளர்களின்  ஆதிக்கம் அதிகளவு இருப்பதால் தமிழ்நாடு தொழிலாளர்களின் வாழ்வாதாரமே முடங்கி  விட்டதாகவும் தொடர்ந்து பல்வேறு தரப்புகளில் இருந்து புகார் எழுந்து  வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க தமிழ்நாட்டிற்கு வரும் வடமாநில  தொழிலாளர்கள் குறித்த சரியான எண்ணிக்கை மற்றும் விவரங்கள் இல்லாததால் இதை  தவறாகப் பயன்படுத்திக் கொண்டு பலர் கொள்ளை, கொலை, வழிப்பறி, பாலியல்  ரீதியான குற்றங்கள், கஞ்சா விற்பனை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது  தொடர் கதையாகி வருகிறது.

அதிலும், குறிப்பாக தாம்பரம் அடுத்த  செம்பாக்கத்தில் உள்ள நகை கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம், சென்னை  நகைக்கடை கொள்ளை, திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளைகள் என பல கொள்ளை சம்பவத்தில்  வட மாநிலத்தவர்கள் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும்  அண்மைக்காலமாக வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் தமிழ்நாட்டை  சேர்ந்தவர்களுக்கும் ஆங்காங்கே மோதல் ஏற்படும் சம்பவங்களும் தொடர்கதையாகி  வருகிறது. இதில், குறிப்பாக சமீபத்தில் திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள்,  தமிழ்நாட்டு தொழிலாளர்களை விரட்டி, விரட்டி தாக்குவது போன்று வெளியான  வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, கோவை மாவட்டம், சூலுார் அடுத்த  குமரன் கோட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் வட  மாநில தொழிலாளிகள் இடையே மோதல் ஏற்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை  ஏற்படுத்தியது. தாம்பரத்தில், பேசியபடி ஆட்டோ கட்டணம் தராததை தட்டிக்கேட்ட  ஆட்டோ டிரைவரை இரண்டு வட மாநில இளைஞர்கள் இரும்பு கம்பியால் தாக்கியது,  தொடர்ந்து கஞ்சா வழக்குகளில் வட மாநில இளைஞர்கள் சிக்குவது என தமிழ்நாடு  முழுவதும் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ரயில்களில் பதிவு  செய்யப்பட்ட ரயில் பெட்டிகளாக இருந்தாலும் வடமாநிலத்தவர்கள் அந்த இடத்தை  ஆக்கிரமித்துக் கொள்வார்கள் எனற நிலை தற்போது அதிகரித்து வருகிறது.

எனவே,  இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்க வட மாநிலங்களில் இருந்து  தமிழ்நாட்டிற்கு வரும் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு பேர்  வருகிறார்கள், தனி நபர்களாக வருகிறார்களா, குடும்பத்தினருடன் வருகிறார்களா,  எந்த பணிகளுக்காக வருகிறார்கள் என்பது குறித்து கணக்கெடுப்பதோடு அவர்களது  முழு விவரங்களை காவல்துறையினர் பெற்றுக் கொண்டால் குற்ற சம்பவங்கள்  நடைபெறும் போது அதன் மேல் நடவடிக்கை எடுக்க எளிதாக இருக்கும் என  கூறப்படுகிறது. இதுகுறித்து பிரபல தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர்  தாம்பரம் நாராயணன் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் கட்டிட வேலை செய்பவர்களுக்கு  அதிக அளவில் சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது. காரணம் தனிநபர் வருமானம்  கூடியதால் குறைந்த அளவில் சம்பளம் பெற்றால் அவர்களால், குடும்பத்தை நடத்த  முடியாது என்பதால் அதிக அளவில் சம்பளம் கேட்கின்றனர். வடமாநிலங்களில்  இருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருபவர்கள் குறைந்த அளவிலேயே சம்பளம்  பெற்றுக் கொண்டு வேலையை செய்கின்றனர்.

தமிழ்நாட்டில் கட்டுமான  பணிகளுக்கு ஆட்கள் தேவை என்றால் அவ்வளவு எளிதில் கிடைத்து விட மாட்டார்கள்.  ஆனால் வடமாநில தொழிலாளிகள் எண்ணிக்கை அதிகப்படியாக இருப்பதால் எவ்வளவு  பேர் வேண்டுமென்றாலும் பணிகளுக்கு வர தயாராக இருக்கின்றார்கள். இவ்வாறு  வந்து குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு அவர்கள் சொந்த செலவிற்கு  ஒரு நாளுக்கு 50 ரூபாய் தான் செலவாகிறது காரணம் வட மாநில தொழிலாளிகள்  கூட்டாக இருந்தபடி எந்த பகுதியில் வேலைக்காக வந்து தங்கி இருக்கிறார்களோ  அங்கு உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த நபர்களிடம் ரேஷன் அரிசி பெற்றுக்கொண்டு  அதில் உணவு சமைத்து சாப்பிட்டுக் கொள்கிறார்கள். அந்த வகையில் அவர்கள்  ஒரு நாளைக்கு 800 ரூபாய் என மாதம் 24 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெறுகின்றனர்.  அதில் ஒரு நாளுக்கு 50 ரூபாய் என ஒரு மாதத்திற்கு 1500 ரூபாய் மட்டுமே ஒரு  தனிநபர் அவர்களது உணவுக்காக செலவு செய்கின்றனர். வேறு ஏதாவது அத்தியாவசிய  தேவை என மாதத்திற்கு 2500 ரூபாய் போனாலும் அவர்களிடம் கையில் 20,000 ரூபாய்  இருக்கும் அந்த பணத்தை உடனடியாக அவர்கள் சொந்த மாநிலத்தில் உள்ள  குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர்.

இதனால்தான் ஒன்றிய  அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் கொண்டு வர முயற்சிக்கிறது ஏனென்றால்  ஒரே ரேஷன் அட்டை திட்டம் வந்தால் வடமாநிலத்தில் இருந்து இங்கே வருபவர்கள்  இங்கு உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காக  இவ்வாறு செய்வதால் தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு இருக்கும் என்றால் நமக்கு  கிடைக்கும் சலுகைகள் முழுமையாக கிடைக்காது என்பதுதான். கட்டிட பணிகளுக்காக  வரும் வடமாநில தொழிலாளிகளில் 90 சதவீத பேர் மது அருந்துவதில்லை என்பதால்  பணிகளும் குறித்த நேரத்தில் முடிவடைகிறது, ஆனால் இங்கு உள்ளவர்கள் அது  போன்று இல்லாமல் வரும் வருமானத்தில் பாதி வருமானத்தில் மது அருந்திவிட்டு  தங்களுக்கு என ஒரு தொகையை கோவில் வைத்துக் கொண்டு மீதமுள்ள தொகையை மட்டும்  தான் குடும்ப செலவுக்காக கொடுக்கின்றனர்,’’ என்றார்.

*குறைந்த சம்பளம்

கட்டுமான தொழிலைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 1100 ரூபாய் சம்பளம் என்றால் வேலைக்கு வர தயாராக இருக்கிறார்கள். ஆனால் அதுவே வடமாநில தொழிலாளிகள் குறைந்தபட்சமாக 500 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 800 ரூபாய் வரை பெற்றுக்கொண்டு வேலை செய்கிறார்கள். இதனால், கட்டுமான நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 200 ரூபாய் என 10 தொழிலாளர்கள் வேலை செய்தார்கள் என்றால் ஒரு  நாளுக்கு 2000 ரூபாய், ஒரு மாதத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. இவ்வாறு லாபம் கிடைப்பதால் வடமாநில தொழிலாளர்களை வைத்து   பெரும்பாலான பணிகளையும், முக்கிய பணிகளை மட்டுமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை   வைத்து செய்து கொள்கின்றனர்.

*ஏஜென்சிகள் மூலம் வருகை

வடமாநில  தொழிலாளர்களை தமிழ்நாட்டில் பல்வேறு வேலைகளுக்காக அழைத்து வருவதற்கு என  ஏஜென்சிகள் செயல்பட்டு வருகிறது. ஒரு நிறுவனத்திற்கு 100 ஆட்கள் வேலைக்கு  தேவை என்றால் அதற்கான ஏஜென்சியிடம் தெரிவித்தால் அவர்கள் சொன்ன நேரத்தில்  100 வட மாநில தொழிலாளிகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் வேலைக்காக  ஒப்படைத்து அதில் தலா ஒருவருக்கு குறிப்பிட்ட தொகை என எவ்வளவு பேர் அழைத்து  வருகிறார்கள் அவர்களை மொத்தமாக கணக்கிட்டு ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக  பெற்றுக் கொள்வார்கள். அதேபோல் சில ஏஜென்சிகள் மாதம் ஒரு தொழிலாளிக்கு  தரும் சம்பளத்தில் ஒரு தொகை என அவர்கள் வேலை செய்து முடியும் நாட்கள் வரை  கணக்கிட்டு அதில் ஒரு தொகையை அவர்களுக்கு என எடுத்துக் கொள்வார்கள். நூறு  தொழிலாளிகளில் 50 பேர் பணி செய்ய முடியவில்லை என சொந்த ஊர்களுக்கு  சென்றாலும் மீண்டும் புதிதாக 50 தொழிலாளிகளை சம்பந்தப்பட்ட ஏஜென்சி  அவர்களுக்கு அனுப்பி வைக்கும். இவ்வாறு ஒரு ஒரு பேட்ச் ஆக தொழிலாளர்கள்  வந்து கொண்டே இருப்பார்கள் என கூறப்படுகிறது.

*நிறுவனங்கள் ஒத்துழைப்பு அவசியம்

காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வேலைக்காக தமிழகம் வரும் வடமாநில  தொழிலாளிகள் மத்தியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை  பொருட்களை சில வட மாநில இளைஞர்கள் கடத்தி வந்து தமிழகத்தில் உள்ள பள்ளி,  கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்து வருகின்றனர். இதனால் ஏராளமான மாணவர்கள்  போதைக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து இதுபோல கஞ்சா  கடத்தி வரும் கும்பலை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து கிலோ  கணக்கில் கஞ்சாவை பறிமுதல் செய்து வரு கிறோம். இதுபோன்று வெளி  மாநிலங்களில் இருந்து வந்து கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் செய்துவிட்டு  பின்னர் மீண்டும் அவர்களது மாநிலங்களுக்கு தப்பி சென்று விட்டால் அவர்களை  தேடி கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது. எனவே எந்த நிறுவனத்திற்காக  வேலைக்கு வருகிறார்களோ அந்த நிறுவனத்தினர் சம்பந்தப்பட்ட தொழிலாளிகள்  குறித்த முழு விவரங்களை வைத்திருப்பது போலீசாரின் நடவடிக்கைகளுக்கு உதவியாக  இருக்கும்,’’ என்றார்.

Related Stories: