காவேரிப்பட்டணம் அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளை விழா

*20 ஆயிரம் பேர் திரண்டனர்

*அலகு குத்தி நூதன நேர்த்திக்கடன்

காவேரிப்பட்டணம் : மகா சிவராத்திரியையொட்டி, காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற மயானக்கொள்ளை திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி நூதன நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன், பூங்காவனத்தம்மன் கோயில்கள் உள்ளன. ஆண்டுதோறும் சிவராத்திரியையொட்டி, இக்கோயிலில் நடைபெறும் மயானக்கொள்ளை விழா பிரசித்தம். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி அண்டைய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, நேர்த்திக்கடன் மற்றும் வேண்டுதல் நிறைவேற்றுவர்.

இந்நிலையில், நேற்று காலை மயானக்கொள்ளை நடைபெற்றது. இதனையொட்டி, முகவெட்டு எடுத்து ஆற்றங்கரை செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்கார தரிசனம் நடைபெற்றது. பக்தர்கள் அலகு குத்தியும், உடல் முழுவதும் எலுமிச்சை பழங்களை குத்தியவாறும் ஊர்வலமாக வந்து  அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், ஏராளமான பக்தர்கள் காளி வேடமணிந்தவாறு கோயிலை சுற்றி வந்தனர். தொடர்ந்து அலகு குத்திக்கொண்டு மயானம் செல்லுதல் நிகழ்ச்சியும், திருத்தேர் மயானம் புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அசோக்குமார் எம்எல்ஏ, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி ஆகியோர் தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.

மயானக்கொள்ளை விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் அங்காளம்மன் ஊர்வலமாக புறப்பட்டு பன்னீர்செல்வம் தெரு, பஸ் நிலையம் வழியாக சென்று ஆற்றரையில் எழுந்தருளினார். அப்போது, பல்வேறு இடங்களில் பக்தர்கள் நூதன நேர்த்திக்கடன் செலுத்தினர். முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி வந்து தீபாராதனை காண்பித்தனர்.

அப்போது, குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், தங்களது குழந்தைகளை அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கியவாறு வந்த பக்தர்களிடம் கொடுத்தனர். அவர்கள், குழந்தைகளை அம்மன் முன் காண்பித்தனர். இந்த காட்சி அங்கு கூடியிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

விழாவையொட்டி, காவேரிப்பட்டணம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. மயானக்கொள்ளை ஊர்வலத்தின்போது வழி நெடுகிலும் அன்னதானம், நீர்மோர், குளிர்பானங்கள் வழங்கினர். விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி, திருவண்ணாமலை, பெங்களூரு, வேலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்தும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் சௌந்தரராஜன், தண்டபாணி, காமராஜ், செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். விழாவையொட்டி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: