அமர்க்களமாக நடந்தது ஆக்ரோஷ கிடா முட்டு-நரிக்குடியில் 50 ஜோடிகள் அசத்தல்

காரியாபட்டி : நரிக்குடி அருகே நடந்த கிடாமுட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன. 30 முட்டுகளுக்கு தாக்குப் பிடித்த கிடாக்கள், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே வீரசோழனில் இந்திய தேசிய லீக் மற்றும் மதுரை தெற்குவாசல் ஆட்டுக் கிடாமுட்டு நண்பர்கள் குழு சார்பாக கிடாமுட்டு போட்டி, ஒரு மாதத்திற்கு முன்பு நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கிடாமுட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததால், போட்டி அமைப்பாளர்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, பல்வேறு நிபந்தனைகளுக்கு பிறகு, கிடாமுட்டு போட்டிகளை நடத்தலாம் என அனுமதி வழங்கியது.

இதனை தொடர்ந்து இந்திய தேசிய லீக் கட்சி மற்றும் மதுரை தெற்குவாசல் கிடாமுட்டு நண்பர்கள் குழுவினர் சார்பில் நேற்று காலை 10.30 மணிக்கு வீரசோழனில் கிடாமுட்டு போட்டி நடந்தது. இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் பசீர் அகமது போட்டியை தொடங்கி வைத்தார். மதுரை, சிவகாசி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 50க்கும் மேற்பட்ட கிடா ஜோடிகள் போட்டியில் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்க வந்த கிடாக்களை, அரசு கால்நடை டாக்டர்கள் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, சான்றளித்தனர்.

போட்டி துவங்கியதும் ஒவ்வொரு ஜோடியாக கிடாக்கள் களத்தில் இறங்கின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் உற்சாகமூட்டி கோஷங்களை எழுப்ப, சீற்றத்துடன் கிடாக்கள் ஆக்ரோஷமாக முட்டிக் கொண்டன. 30 முறை முட்டி, அசராமல் நின்று தாக்குப்பிடித்த கிடாக்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன. வெற்றி பெற்ற கிடாகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜஹாங்கீர், பொருளாளர் குத்தூஸ்ராஜா, வீரசோழன் ஊராட்சி மன்றத் தலைவர் முகமது சாதிக் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர். திருச்சுழி டிஎஸ்பி ஜெகநாதன், நரிக்குடி இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: