பெண் அதிகாரி வீட்டில் 40 சவரன் அபேஸ் தப்பிய கொள்ளையனை பிடிக்க பெங்களூரு விரைந்தது தனிப்படை

சென்னை: மாம்பலத்தில் ஒன்றிய அரசின் முன்னாள் பெண் அதிகாரி வீட்டில் பிளம்பர் என கூறி 40 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற ஆசாமியை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். சென்னை மேற்கு மாம்பலம் ராஜூ தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் வெங்கட சுப்ரமணியன் (66). இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பத்மாவதி (62) ஒன்றிய அரசின் இஎஸ்ஐ நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவன், மனைவி இருவரும் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாம்பலம் கணபதி தெருவில் மற்றொரு வீடு உள்ளது. இந்த வீட்டில் பிளம்பிங் வேலை இருப்பதாக கூறி அவரது கணவர் நேற்று முன்தினம் மாலை அந்த வீட்டிற்கு சென்றுள்ளார். பத்மாவதிக்கு சற்று காது கேட்கும் திறன் குறைவு என கூறப்படுகிறது.

இதனால், கணவர் பிளம்பிங் வேலை என்று கூறியதை தாம் வசிக்கும் வீட்டில் தான் என்றும், தனது கணவர் பிளம்பரை அழைத்து வர சென்றுள்ளதாகவும் நினைத்துள்ளார். சிறிது நேரத்தில், வீட்டின் கதவை ஒருவர் தட்டியுள்ளார். உடனே பத்மாவதி கணவர் அனுப்பிய பிளம்பர் தான் வந்துள்ளார் என நினைத்து கதவை திறந்து, பிளம்பர் தானே நீங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மர்ம நபர் ஆமாம் என்று கூறி வீட்டிற்குள் சென்றுள்ளார். பிறகு அந்த நபர் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று பார்த்துள்ளார். இறுதியாக படுக்கை அறைக்கு சென்ற அந்த நபர், கதவில் பழுது இருப்பதாக கூறி உள் பக்கமாக தாழிட்டு கொண்டார். சிறிது நேரம் கழித்து, பழுது நீக்கும் கருவியை நாளை எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு அந்த நபர் சென்றுவிட்டார்.

பிறகு பத்மாவதி படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 40 சவரன் நகை மாயமாகி இருந்தது. உடனே இதுகுறித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து வீடு முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

பிறகு ராஜூ தெருவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று பார்த்த போது, சைக்கிளில் வந்த அந்த மர்ம நபர், அதே தெருவில் 2 வீடுகளை நோட்டமிட்டுள்ளார். அங்கு ஆட்கள் இருந்ததால் 3வதாக பத்மாவதி வீட்டிற்கு வந்து கைவரிசை காட்டி விட்டு சென்றது தெரியவந்தது.

கொள்ளையனை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. செல்போன் சிக்னல் மற்றும் சிசிடிவி பதிவு விவரங்களை வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய போது, கொள்ளையன் பெங்களூரு தப்பி சென்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் கொள்ளையனை பிடிக்க பெங்களூரு விரைந்துள்ளனர்.

Related Stories: