ஜார்க்கண்ட் கவர்னராக பதவி ஏற்றார் சி.பி ராதாகிருஷ்ணன்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில புதிய கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். ஜார்கண்ட்  மாநில ஆளுநராக கடந்த 2021ம் ஆண்டு ஜூலை முதல் ரமேஷ் பாயிஸ் இருந்து  வந்தார். இவருக்கு பின் ஜார்கண்ட் ஆளுநராக கடந்த சில நாட்களுக்கு முன்  தமிழ்நாட்டை சேர்ந்த பாஜ மூத்த தலைவரும், 2 முறை மக்களவை எம்பியுமாக தேர்வு  செய்யப்பட்டவருமான சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். நேற்று  முன்தினம் அவர் ஜார்க்கண்ட் மாநிலம் சென்றார். ராஞ்சி விமான நிலையத்தில்  அவரை முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். இதை  தொடர்ந்து நேற்று ராஜ்பவனில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில்  ஜார்கண்டின் 11வது ஆளுநராக சிபி. ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார்.  அம்மாநில உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங்  ஆளுநராக சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த  விழாவில் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஒன்றிய அமைச்சர் எல் முருகன் ஆகியோர் பங்கேற்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ஜார்க்கண்ட் மாநில அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள்  கலந்து கொண்டனர்.

மேலும் தமிழகத்தில் இருந்து பா.ஜ மூத்த தலைவர் பொன்ராதாகிருஷ்ணன், அகில இந்திய பா.ஜனதா மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், சட்டப்பேரவை  பா.ஜ தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ மாநில துணைத்தலைவர் சக்ரவர்த்தி, பொதுச்செயலாளர்கள் காா்த்திகாயினி, பொன்பாலகணபதி ஆகியோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர்  ராதாகிருஷ்ணன், ‘ஜார்கண்ட் ஆளுநராக பொறுப்பேற்றதில் எனக்கு மிகுந்த  மகிழ்ச்சி. மாநிலத்தின் அனைத்து துறை வளர்ச்சியை உறுதி செய்வதே அடிப்படை  நோக்கம். வளர்ச்சி மட்டுமே வறுமையை ஒழிப்பதற்கான தீர்வு” என்றார்.

Related Stories: