தேர்தல் ஆணையத்தின் சாதகமான அறிவிப்பால் டுவிட்டர் பக்கத்தை மாற்றியமைத்த ஏக்நாத் ஷிண்டே: சுப்ரீம் கோர்ட்டை நாட உத்தவ் தாக்கரே முடிவு

மும்பை: சிவசேனா கட்சி மற்றும் சின்னம் ஆகியன ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியதால், அவர் தனது டுவிட்டர் பக்கத்தின் முகப்பு பகுதியை மாற்றியமைத்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. சுமார் இரண்டரை ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, அன்றைய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். தொடர்ந்து நடந்தபல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து, கடந்த 2022 ஜூன் 30ம் தேதி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது.

அதன்பின், உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே என இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். இருதரப்பும் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் மீது உரிமைக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகிய நிலையில் எட்டுமாத தாமதத்துக்கு பிறகு தேர்தல் ஆணையம் ஷிண்டே தரப்புக்கு சின்னத்தையும், கட்சியையும் வழங்கியுள்ளது. இதனை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு, உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையே தேர்தல் ஆணையத்தின் முடிவு தனது பிரிவுக்கு சாதகமாக அமைந்ததை அடுத்து, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தில், சிவசேனாவின் ‘வில் அம்பு’ சின்னத்தையும், சிவசேனா என்ற கட்சியின் பெயரையும் பதிவிட்டுள்ளார்.

Related Stories: