உயர் கல்வி நிறுவனங்களில் தாய் மொழி கல்வி: யுஜிசி தலைவர் கடிதம்

புதுடெல்லி: உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தாய் மொழிகளில் பயிற்றுவிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என மாநில ஆளுனர்கள், முதல்வர்களுக்கு யுஜிசி தலைவர் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பல்கலைகழக மானிய குழு(யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் அனைத்து மாநிலங்களின் ஆளுனர்கள், முதல்வர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில்,தேசிய கல்வி கொள்கை 2020ன் படி இந்திய மொழிகளில் கல்வி பயிற்றுவிப்பதற்கு முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி கல்வி பயிற்றுவிப்பது மற்றும் புத்தகங்கள் ஆகியவை தாய்மொழியிலேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள ஏராளமான கல்லூரிகள், பல்கலைகழகங்களில் சமூக அறிவியல், வணிகவியல் மற்றும் அறிவியல் பாடங்கள் அவரவர் தாய்மொழியில் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால் பாட புத்தகங்கள் இந்திய மொழிகளில் இல்லாதது கவலை தருவதாக உள்ளது.தேசிய கல்வி கொள்கையின்படி மாணவர்களின் தாய்மொழியில் தரமான கல்வி வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களுக்கு அவரவர் தாய்மொழியிலேயே பாடபுத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். பாடங்களையும் உள்ளூர் மொழிகளில் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: