வீட்டை லீசுக்கு எடுத்து ரூ.5 கோடி மோசடி செய்த முதியவர் அதிரடி கைது: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி உள்பட 50 பேரை ஏமாற்றியது அம்பலம்

சென்னை: சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (70), ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ராமலிங்கம் என்பவருக்கு ரூ.6 லட்சத்துக்கு எனது வீட்டை ஒரு வருடத்திற்கு லீசுக்கு விட்டேன். ஒரு வருடம் முடிந்தபோது, வீட்டை காலி செய்வதற்கு ராமலிங்கத்தை பார்க்க சென்றேன். அப்போது வேறு ஒருவர் அங்கு இருந்தார். அவரிடம், ராமலிங்கம் இல்லையா என்று கேட்டதற்கு, அந்த நபர் இந்த வீட்டின் உரிமையாளர் ராமலிங்கம் என்று சொல்லி, அவர் தான் எங்களுக்கு வீடு லீசுக்கு விட்டதாக கூறினார்.

அதிர்ச்சியடைந்த நான், ராமலிங்கத்தை தேடினேன். இதையறிந்த அவர் தலைமறைவாகிவிட்டார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமலிங்கத்தை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று நொளம்பூர் சர்வீஸ் சாலையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக பைக்கில் வந்த முதியவரை போலீசார் மடக்கி, பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து போலீசார் அவரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கனகராஜ் என்பவரின் வீட்டை லீசுக்கு விட்டு பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவானவர் என்று தெரிய வந்தது.

மேலும், கனகராஜை ஏமாற்றியது போல் அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு, கோடம்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் லீசுக்கு வீடு எடுத்து, அந்த வீட்டை ரூ.20 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.40 லட்சம் என விற்பனை செய்து சுமார் 50க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.5 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, ராமலிங்கத்தை கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மோசடி மன்னன் ராமலிங்கம்  நொளம்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் அவரால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் காவல்நிலையம் வந்து போலீசாரிடம் கடும்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: