புறநகரில் கடந்த 6 ஆண்டுகளாக தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் சிக்கினார்: 6 சவரன் நகை, ரூ.1 லட்சம் பறிமுதல்

வேளச்சேரி: வேளச்சேரி பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக தொடர்கொள்ளையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 6 சவரன் நகை, ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வேளச்சேரி பெல்சக்தி நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டில், கடந்த 2018ம் ஆண்டு மர்ம நபர் ஒருவர் ஜன்னல் வழியே புகுந்து 8.5 சவரன் தங்க நகையை திருடிச் சென்றார். இதேபோல் கடந்த ஆண்டு வேளச்சேரியில் சீதா என்பவரின் வீட்டில் ஒரு சவரன் தங்க நகை, ரொக்கப் பணமும், சிவக்குமார் என்பவரின் வீட்டில்  ரொக்க பணம் ரூ.2 லட்சமும் திருடுபோனது. இந்த சம்பவங்கள் தொடர்பான புகாரின்பேரில் வேளச்சேரி காவல்நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து  அந்தப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது இந்த 3 கொள்ளையிலும் பழைய குற்றவாளியான ராணிபேட்டை மாவட்டம், கீழ்விசாரத்தை சேர்ந்த அப்துல் ரஹ்மான் (38) என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நேற்று கொள்ளையன் அப்துல் ரஹ்மானை கைது செய்து காவல்நிலையம்  அழைத்து விசாரணை செய்தனர். இதில், அவர் கடந்த 6 ஆண்டுகளாக இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்துவைத்து தூங்கிய 9 வீடுகளில் ஜன்னல் வழியாக நுழைந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ரஹ்மானிடம் இருந்து 6 சவரன் தங்க நகைகளை மீட்டனர். மேலும் வீட்டில் அவர் வைத்திருந்த ரூ..1 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த பொலீசார் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: