வரும் ஆண்டுகளில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு கூடுதலாக 6,500 விமானிகள் தேவைப்படுவர்: பயணிகள் விமான நிறுவனத்துறை தகவல்

மும்பை: வரும் ஆண்டுகளில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு கூடுதலாக 6,500 விமானிகள் தேவைப்படுவர் என பயணிகள் விமான நிறுவனத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் கடன் பிரச்னையால் நஷ்டத்தால் இயங்கி வந்த நிலையில் அதனை டாடா குழுமம் அக்டோபர் 2021ம் ஆண்டு வாங்கியது. இதனிடையே, பிரான்சின் விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களையும், அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களையும் வாங்க அண்மையில் ஏர் இந்தியா ஒப்பந்தம் செய்தது. சில மாதங்களுக்கு முன் 370 விமானங்கள் வாங்குவதற்கு ஏர் இந்தியா ஒப்பந்தம் செய்திருந்தது.

மொத்தம் புதிதாக வாங்க உள்ள 840 விமானங்களில் பணியாற்ற ஏர் இந்தியா நிறுவனத்துக்கு கூடுதலாக 6500 விமானிகள் தேவைப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 113 விமானங்களை இயக்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தில் 1500 விமானிகள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2005ம் ஆண்டு ஏர் இந்தியா 111 விமானங்களை வாங்க ஆர்டர் அளித்தது. அதன்பிறகு, கடந்த 17 ஆண்டுகளில் ஏர் இந்தியா விமானங்களை கொள்முதல் செய்வது இதுவே முதல்முறை ஆகும். ஏர் இந்தியாவின் மிகப்பெரிய விமான ஆர்டர் இதுதான். இந்திய விமான போக்குவரத்து வரலாற்றில் இது மைல்கல்லாக அமையும் என கூறப்படுகிறது.

Related Stories: