காவேரிப்பாக்கத்தில் கடைகள், நிலங்கள் இருந்தும் பூஜையின்றி பூட்டியிருக்கும் பெருமாள் கோயில்: திறந்து வழிபாடு நடத்த கோரிக்கை

காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் நகரில், பூட்டியிருக்கும்  அபயவரத பெருமாள் கோயிலை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது காவேரிப்பாக்கம் பேரூராட்சி. இப்பேரூராட்சியில் மிகவும் பழமையான கொங்கணேஸ்வரர் கோயில், முத்தீஸ்வரர் கோயில், பஞ்சலிங்கேஸ்வரர் கோயில், சோமநாத ஈஸ்வரர் கோயில், மற்றும் கோட்டை அபயவரத பெருமாள் கோயில், உள்ளிட்ட பழமை  வாய்ந்த கோயில்கள் உள்ளன.

இதில் கோட்டை கோயில்கள் என்று அழைக்கப்படும் கொங்கணேஸ்வரர்  கோயில் மற்றும் அபயவரத பெருமாள் கோயில் ஆகிய இரண்டும் பராமரிப்பு இல்லாமல்,  இன்று ஒரு கால பூஜை நடைபெறுவதே  மிகவும் அரிதாக உள்ளது. மேலும் இக்கோயிலுக்கு என்று நிலங்கள் மற்றும் கடைகள்  இருந்தும் விளக்குகள் இன்றி காணப்படுகிறது. இந்த இருகோயில்களும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் இங்குள்ள அபயவரத பெருமாள் கோயில் கடந்த சில வருடங்களாக ஒருகால பூஜைகள் கூட இல்லாமல் பூட்டி காணப்பட்டது.

இதனையடுத்து பொதுமக்களின் புகாரினை தொடர்ந்து கடந்த ஆண்டு, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில், அரசு அதிகாரிகள் கோயிலில் பூஜைகள்  நடைபெற திறந்து விட்டனர். இதனால் கோயிலில் பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன. பின்னர், நேற்று முன்தினம் அரசு அதிகாரிகள் கோயிலின் கதவுகளை மீண்டும் பூட்டி சாவியை எடுத்து சென்றுள்ளனர். இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கோயில் வளாகம் முழுவதும் இருளில்  மூழ்கி  காணப்படுகிறது.

அமைச்சரின் உத்தரவின் பேரில் திறக்கப்பட்ட கோயிலை, அரசு அதிகாரிகள் மீண்டும் பூட்டியதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ேகாயிலுக்கு சொந்தமான கடைகளின் வாடகை மற்றும் நிலங்கள் குறித்து ஆய்வு செய்து தினமும் கோயிலில் பூஜை நடைபெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: