வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி 2வது வெற்றி: எதிர்பார்த்ததை செய்து முடித்தோம்: கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டி

கேப்டவுன்: 10 அணிகள் பங்கேற்றுள்ள 8வது ஐசிசி மகளிர் டி.20 கிரிக்கெட் தொடர் தென்ஆப்ரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 9வது லீக் போட்டியில் குரூப் 2 பிரிவில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவரில், 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டாஃபானி டெய்லர் 42 ரன் அடித்தார். இந்திய பவுலிங்கில் தீப்தி சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில், ஸ்மிருதி மந்தனா 10, ஷபாலி வர்மா 28, கேப்டன் ஹர்மன்பிரீத் சவுர் 33 ரன்னில் வெளியேற ரிச்சா கோஷ் நாட்அவுட்டாக 32 பந்தில் 44 ரன் அடிக்க 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன் எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தீப்தி சர்மா ஆட்டநாயகி விருது பெற்றார். முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியாவுக்கு இது 2வது வெற்றியாகும். வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது: எங்களுக்கு சிறப்பான நாள். நாங்கள் எதை எதிர்பார்த்தோமோ அதைச் செய்து முடித்தோம். சில பந்துகளை தவிர, நாங்கள் நன்றாக பவுலிங் செய்தோம். தீப்தி சிறப்பாக செயல்பட்டார். பவுலிங் பயிற்சியாளர் அவருக்கு உதவினார். ரிச்சா கோஷ் எங்களுக்கு சிறந்தவர். அவர் எப்போதும் வெற்றிபெற்றுத் தரக்கூடியவர். மிகவும் ஆபத்தான பேட்டர்.

அடுத்த ஆட்டம் மிகவும் முக்கியமானது, என்றார். ஆட்டநாயகி தீப்தி சர்மா கூறுகையில், ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் சுழன்று திரும்பியது. ஸ்டம்பை குறி வைத்து தாக்குதல் தொடுப்பதில் கவனம் செலுத்தினேன். 100 விக்கெட் மைல்கல்லை எட்டியது மகிழ்ச்சி தான். ஆனால் கவனம் எல்லாம் எஞ்சிய உலகக் கோப்பை போட்டி மீதே உள்ளது’ என்றார். இந்தியா அடுத்த போட்டியில் நாளை மறுநாள் இங்கிலாந்துடன் மோதுகிறது.

Related Stories: