போயிங் விமானத்தை இந்தியா வாங்குவதால் 10 லட்சம் அமெரிக்கர்கள் பயனடைவார்கள் என பைடன் கருத்து: இந்திய உறவை வலுப்படுத்தவும் விருப்பம்

வாஷிங்டன்: இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து, 190 போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள், 20 போயிங் 737 ரக விமானங்கள், 10 போயிங் 777எக்ஸ் ரக விமானங்களை இந்தியாவின் ஏர் இந்தியா நிறுவனம் வாங்கவுள்ளது. இதன் 220 விமானங்களின் மதிப்பு 34 பில்லியன் டாலர்களாகும். மேலும், கூடுதலாக 50 737 மேக்ஸ் ரக விமானங்கள், கூடுதலாக 20 737 ரக விமானங்களும் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 45.9 பில்லியன் டாலர்களாகும். இதற்கான ஒப்பந்தம் நேற்றுமுன்தினம் கையெழுத்தானது.

இதுகுறித்து பிரதமர் மோடி ‘இதுஒரு வரலாற்று சிறப்புமிக்க மைல்கல் ஒப்பந்தம்‘ என்று தெரிவித்திருந்தார். இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “இந்த சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம் வாயிலாக 10 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவின் 44 மாகாணங்களை சேர்ந்தவர்கள் இதனால் பயனடைவார்கள். இந்தியாவுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது” என்று கூறியுள்ளார். போயிங் நிறுவனத்திடம் இருந்து அதிக எண்ணிக்கையில் விமானங்களை வாங்கும் இரண்டாவது நிறுவனம் ஏர் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: