வங்கதேச புதிய அதிபராக ஷஹாபுதீன் சுப்பு போட்டியின்றி தேர்வு

டாகா: வங்கதேசத்தின் 22வது அதிபராக 74 வயதான ஷஹாபுதீன் சுப்பு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவரும், 7 முறை சட்டமன்ற உறுப்பினருமாக இருந்த முகமது அப்துல் ஹமீத் வங்கதேச  அதிபராக மிகநீண்ட நாள் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 2 முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஹமீதின் பதவிக் காலம் ஏப்ரல் 23ம் தேதியுடன் நிறைவடைகிறது. வங்கதேச அரசியலமைப்பு சட்டப்படி ஹமீத் 3வது முறையாக பதவி வகிக்க முடியாது. இதையடுத்து புதிய அதிபராக முகமது ஷஹாபுதீன் சுப்புவின் பெயரை ஆளும் அவாமி லீக் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது. ஷஹாபுதீனை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், ஷஹாபுதீன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக வங்கதேச தலைமை தேர்தல் ஆணையர் காசி அபிபுல் அவல் நேற்று அறிவித்தார்.

இதனை தொடர்ந்து வங்கதேசத்தின் 22வது அதிபராக முகமது ஷஹாபுதீன் சுப்பு பதவி ஏற்கவுள்ளார். மாவட்ட, அமர்வு நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஷஹாபுதீன், ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆணையராகவும் பொறுப்பு வகித்து வந்தார். பின்னர் அரசியலில் இணைந்த முகமது ஷஹாபுதீன் சுப்பு, அவாமி லீக் கட்சியின் ஆலோசனை குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

Related Stories: