தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் 60 இடங்களில் வருமானவரி துறை சோதனை: ஆதித்யராம் குழுமம், அசோக் ரெசிடென்சி, அம்பாலால் கே.கே.எம்.கல்குவாரி உள்ளிட்ட நிறுவனங்களில் ரெய்டு

* பல கோடி மதிப்பு சொத்து பத்திரங்கள், நகைகள் வெளிநாட்டு முதலீடுகள், ஆவணங்கள் சிக்கின

சென்னை: வருமான வரித்துறையில் முறையாக கணக்கு காட்டாமல், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அசோக் ரெசிடென்சி, ஆதித்யராம் குழுமம், அம்பாலால் குரூப், கே.கே.எம். கல்குவாரி நிறுவனம் என 4 பெரிய நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், கணக்கில் வராத பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள், தங்க நகைகள், வெளிநாட்டு முதலீடுகளை கைப்பற்றி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அண்ணாநகர் மேற்கு 6வது அவென்யூ பகுதியை சேர்ந்தவர், அசோக். தொழிலதிபரான இவர், ‘அசோக் ரெசிடென்சி’ என்ற பெயரில் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். மேலும், அவருக்கு சென்னை அண்ணாநகர், போரூர், ஸ்ரீ பெரும்புதூர் என தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் அசோக் ரெசிடென்சி என்ற பெயரில் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன. அதேபோல், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில்  பனையூரை தலைமையிடமாக கொண்டு ஆதித்யராம் குழுமம் இயங்கி வருகிறது. இந்த குழுமத்துக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம், ரெசிடென்சி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை அவர் நிர்வகித்து வருகிறார்.

வேலூரை தலைமையிடமாக கொண்டு, அம்பாலால் குழுமம் இயங்கி வருகிறது. இந்த குழுமத்தின் உரிமையாளர் ஜவுரிலால் ஜெயின். இந்த குழுமத்துக்கு சொந்தமாக கல்வி நிறுவனம், ரியல் எஸ்டேட், நகைக்கடை, கட்டுமான நிறுவனம் உள்ளிட்டவை பல தொழில்கள் உள்ளது. அதேபோல, நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இயங்கி வரும் கே.கே.எம். கல்குவாரி நிறுவனங்கள் உள்ளன. இந்த 4 பெரிய குழுமங்கள், கடந்த 2021-22 ஆண்டுக்கான வருமான வரி முறையாக செலுத்தவில்லை என்றும், இந்த நிறுவனங்கள் தங்களின் வருமானத்தை, போலி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய்யை குறைத்து காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதேநேரம் இந்த 4 நிறுவனங்களும், தங்களுக்கு வருவாய் இழப்பு என்று வருமான வரியில் கணக்கு காட்டியதோடு, கடந்த நிதியாண்டில் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து இருப்பதும், புதிய நிறுவனங்கள் தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து, ஒன்றிய அரசுக்கு இந்த 4 குழுமம், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து தெற்கு மண்டல வருமான வரித்துறை அதிகாரி தலைமையில், 200க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் அசோக் ரெசிடென்சி, ஆதித்யராம் குழுமம், அம்பாலால் குழுமம், கே.கே.எம். கல்குவாரி நிறுவனம் என 4 பெரிய நிறுவனங்களில் நேற்று அதிகாலை அதிரடியாக சோதனை நடத்த தொடங்கினர்.

குறிப்பாக, அசோக் ரெசிடென்சி நிறுவனத்துக்கு சொந்தமான அண்ணாநகர், போரூரை  அடுத்த அய்யப்பன்தாங்கலில் உள்ள அசோக் ரெசிடென்சி ஓட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ஓட்டல்களில் அறை எடுத்து தங்கியவர்கள், ஊழியர்கள் என யாரையும் வெளியே விடவில்லை. அதேபோல் வெளியே இருந்து யாரையும் ஓட்டலுக்குள் விடவில்லை. பிரச்னையை தவிர்க்க, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும், அசோக் ரெசிடென்சி நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர் அசோக் வசித்து வரும், அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள அவரது வீட்டில் 2 கார்களில் வந்த 12க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் நள்ளிரவு வரை தொடர் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் இருந்த தொலைபேசி தொடர்புகள், இன்டர்நெட் இணைப்புகளை துண்டித்தனர்.

அதேபோல் சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2வது தெருவில் உள்ள, மேட்ரிக்ஸ் இன்போடென் நிறுவனம் உரிமையாளர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோல், ஆதித்யராம் குழுமத்துக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் உள்பட பல நிறுவனங்களிலும் வருமான வரித்துறை இணை கமிஷனர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த குழுமத்துக்கு, சொந்தமான கேளம்பாக்கம் ராஜன் நகரில் உள்ள அலுவலகம், புதுப்பாக்கம் பகுதியில் உள்ள அலுவலகம், காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள அலுவலகம், பனையூரில் உள்ள தலைமை அலுவலகம், உரிமையாளர் வீடுகளில் இந்த சோதனை நடந்தது.

மேலும், அம்பாலால் குழுமத்தின் உரிமையாளர் ஜவுரிலால் ஜெயின் வசித்து வரும் குடியாத்தம் சந்தைப்பேட்டையில் உள்ள வீடு, அந்த குழுமத்துக்கு சொந்தமான நகைக்கடை, தலைமை அலுவலகம், கெஸ்ட் அவுஸ், வேலூர் கிரின் சர்க்கிள் பகுதியில் உள்ள அம்பாலால் குடியிருப்பு, தியாகராஜபுரத்தில் உள்ள அலுவலகம் என அந்த குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் நேற்று நள்ளிரவு வரை சோதனை நடந்தது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள சிதறால் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். பிரபல தொழிலதிபர் இவர், கே.கே.எம் என்ற பெயரில் கல்குவாரிகள் நடத்தி வருகிறார்.

இதுதவிர இவருக்கு சொந்தமாக திருமண மண்டபங்கள், செங்கல் சூளைகள், கனரக வாகனங்கள் உள்ளது. ஏராளமான டாரஸ் லாரிகள் உள்ளன.  வரிஏய்ப்பு புகாரை தொடர்ந்து குலசேகரன் அருகே உள்ள சிதறால் பகுதியில் உள்ள தொழிலதிபர் ராஜேந்திரன் வீடு, அவருக்கு சொந்தமான கே.கே.எம் நிறுவனத்தின் கல்குவாரிகள், திருமண மண்டபங்கள், மார்த்தாண்டத்தில் உள்ள அலுவலகம் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் இரவு வரை சோதனை நடத்தினர். 4 நிறுவனங்களுக்கு சொந்தான சென்னையில் 20 இடம், நெல்லை, கன்னியாகுமரி, விழுப்புரம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா என மொத்தம் 60 இடங்களில் நேற்று நள்ளிரவு வரை சோதனை நடந்தது.

இந்த சோதனையின் போது அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சில இடங்களில் பணம் எண்ணும் இயந்திரங்கள், நகைகள் எடை போடும் மின்னணு இயந்திரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பயன்படுத்தினர். இந்த சோதனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 நிறுவனங்களுக்கு சொந்தமான 60 இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பல கோடி ரூபாய் ரொக்கம், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பல நூறு கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ஹார்ட்டிஸ்குகள், பென் டிரைவ்கள், கணினிகள், இரண்டு விதமாக பராமரித்து வந்த கணக்குகள் மற்றும் அதற்கான ரசீதுகள், வெளிநாட்டு முதலீடுகள், புதிய நிறுவனங்களில் தொடங்கியது, பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள், முதலீடுகள், புதிய நிறுவனங்கள் தொடங்கியது குறித்து ஆவணங்களை வைத்து, 4 நிறுவனங்களின் உரிமையாளர் மற்றும் பங்குதாரர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட சொத்து பத்திரங்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் கணக்காய்வு செய்து வருகின்றனர். இந்த சோதனை இன்றும் நீடிக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான சோதனை முடிந்த பிறகு தான் 4 நிறுவனங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்த சொத்துக்கள் குறித்து தெரிவிக்கப்படும் என்று ஐடி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அசோக் ரெசிடென்சி, ஆதித்யராம் குழுமம், அம்பாலால் குரூப், கே.கே.எம். கல்குவாரி ஆகிய 4 பெரிய குழுமங்கள், 2021-22 ஆண்டுக்கான வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என்பது குற்றச்சாட்டு.

* இந்த நிறுவனங்கள் போலி கணக்குகள் மூலம் வருமானத்தில் பல கோடி ரூபாய்யை குறைத்து காட்டியதாக தெரிகிறது.

* வருவாய் இழப்பு என்று வருமான வரியில் கணக்கு காட்டியதோடு, கடந்த நிதியாண்டில் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. புதிய நிறுவனங்களையும் தொடங்கி உள்ளது.

Related Stories: