கோபி அருகே மனைவியுடனான படுக்கையறை காட்சிகளை நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் பகிர்ந்தவர் கைது

*மளிகை கடை நடத்தியவர் மத்திய அரசு ஊழியர் எனக்கூறி ஏமாற்றியதும் அம்பலம்

கோபி :  கோபி அருகே முதுகலை பட்டதாரியை மத்திய அரசு ஊழியர் என்று கூறி ஏமாற்றி திருமணம் செய்த மளிகைக் கடைக்காரர், மனைவியுடனான படுக்கையறை காட்சிகளை நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் பகிர்ந்ததால் கைது செய்யப்பட்டார்.பழனி அருகே உள்ள பொட்டம்பட்டியை சேர்ந்த கட்டின்துரை மகள் அபிதா (23).முதுகலை பட்டதாரி. இவருக்கும் கோபி அருகே உள்ள மொடச்சூர்  செந்தில்நாதன் நகரை சேர்ந்த செல்லபாண்டி மகன் லிவிங்ஸ்டன் ஜெயபால் (30) என்பவருக்கும் கடந்த 2020 நவம்பரில் திருமணம் நடைபெற்றது. ஜெயபால் மத்திய அரசில் உணவு பாதுகாப்பு அலுவலராக இருப்பதாக கூறியுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு மாமனார் செல்லபாண்டி, மாமியார் ஜெயா, கணவரின் அக்காள் கிறிஸ்டி ஞானசெல்வி, தங்கை கிரேட்டர் எஸ்தர் ஆகியோர் அபிதாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அபிதாவை, அவரது  பெற்றோரிடம் பேச விடாமல் தடுத்துள்ளனர். இந்நிலையில் அபிதாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின் கணவர் வீட்டாரின் வரதட்சணை கொடுமை அதிகரித்ததால், அபிதா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த எல்சன் என்பவர், அபிதாவை செல்போனில் தொடர்பு கொண்டு ஜெயபால், மத்திய அரசு பணியில் இல்லை என்றும், அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அபிதா மற்றும் அவரது பெற்றோர் ஜெயபாலிடம் கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த அவர் அபிதாவுடன் இருந்த படுக்கையறை காட்சிகளை வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

மேலும் படுக்கையறை காட்சிகளை பதிவு செய்து வைத்துள்ளதாகவும், தான் மத்திய அரசு ஊழியர் இல்லை என்பதை வெளியில் கூறினாலோ அல்லது புகார் அளித்தாலோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக மனைவி மற்றும் அவர்களது பெற்றோரை மிரட்டியதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த அபிதா அளித்த புகாரின் பேரில் ஜெயபால் மீது 9 பிரிவுகளின் கீழ் கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மேனகா வழக்குப்பதிவு செய்தார்.

போலீசாரின் விசாரணையில் லிவிங்ஸ்டன் ஜெயபால் பச்சமலை சாலையில் மளிகை கடை நடத்தி வருவது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து ஜெயபாலை கைது செய்து கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் கோபி கிளை சிறையில் அடைத்தனர். வரதட்சணை கொடுமை வழக்கில் ஜெயபாலின் தந்தை, தாய், சகோதரிகள் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: