திருவண்ணாமலையில் நடந்த ஏடிஎம் கொள்ளையில் 3 நாளில் குற்றவாளிகள் சிக்குவார்கள்: வடக்கு மண்டல ஐஜி பேட்டி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், 4 ஏடிஎம்களை உடைத்து கொள்ளையடித்த குற்றவாளிகள் 3 நாட்களில் சிக்குவார்கள் என வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூர் ஆகிய இடங்களில் ஒரே இரவில் 4 ஏடிஎம்களை உடைத்து ரூ.73 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடக்கிறது.

இதுகுறித்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் நேற்று அளித்த பேட்டி: வெளிமாநிலத்தை சேர்ந்த குறிப்பிட்ட ஒரு கும்பல்தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அசாம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கொள்ளை நடந்துள்ளது. தமிழ்நாட்டில் இதுபோன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது இதுதான் முதன்முறை. கடந்த 2021ல் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஏடிஎம் திருட்டு நடந்தது. அந்த வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை முழுமையாக கைது செய்தது தமிழ்நாடு போலீஸ். அந்த கொள்ளை கும்பல் வசிக்கும் பகுதியை சேர்ந்தவர்கள்தான், தற்போது நடந்த ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்களாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இந்த வழக்கை தமிழ்நாடு அரசு தனி கவனத்துடன் பார்க்கிறது. எனவே, உயர்நிலை அதிகாரிகள் நேரடியாக விசாரணையை துரிதப்படுத்தி வருகிறோம். மேலும், 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 5 எஸ்பிக்கள் இடம் பெற்றுள்ளனர். வெளி மாநிலத்துக்கும் தனிப்படையினர் விரைந்துள்ளனர். இந்த கொள்ளையில் அறிவியல் பூர்வமான தடயங்கள் கிடைத்திருக்கிறது. எந்த மாதிரியான வாகனங்கள் பயன்படுத்தினர் என்ற தகவல்கள் எல்லாம் கிடைத்திருக்கிறது. 4 ஏடிஎம்களிலும் ஒரே கும்பல்தான் ஈடுபட்டிருக்கிறது. குற்றவாளிகளை 3 நாட்களில் பிடித்து விடுவோம். வட மாநிலங்களில் இருந்து வருவோர் எல்லாம் இதுபோன்றவர்கள் இல்லை. ஆனாலும், தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார்.

* ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களா?

திருவண்ணாமலை மாவட்டத்தில், 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த கும்பல் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கேஜிஎப் பகுதியில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கையாண்ட முறையை, திருவண்ணாமலை மாவட்டத்திலும் பின்பற்றி கொள்ளையடித்துள்ளனர். எனவே, கேஜிஎப் பகுதியில் கொள்ளையடித்த ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் குறித்த விபரங்களை  தனிப்படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: