வங்கதேச புதிய அதிபராகிறார் ஓய்வு பெற்ற நீதிபதி

டாக்கா: வங்கதேசத்தின் புதிய அதிபராக ஓய்வு பெற்ற நீதிபதி முகமது சகாபுதீன் சுப்பு தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது. வங்கதேச அதிபராக உள்ள முகமது அப்துல் ஹமீதின் பதவி காலம் வரும் ஏப்ரல் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அதிபர் பதவிக்கான வேட்பாளராக முகமது சகாபுதீன் சுப்பு ஆளும் அவாமி லீக் கட்சியால் நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியான இவர் ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் உறுப்பினராக பதவி வகித்துள்ளார். ஓய்வு பெற்ற பின் ஆளும் கட்சியான அவாமி லீக்கில் சேர்ந்தார். அவருக்கு கட்சியின் ஆலோசனை குழுவில் இடம் வழங்கப்பட்டது. முகமது சகாபுதீனுக்காக அவாமிலீக் கட்சி வேட்புமனுவை சமர்ப்பித்துள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 350 எம்பி.க்களில் ஆளும் கட்சிக்கு 305 பேர் உள்ளனர். எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால், அதிபர் தேர்தலில் பெரும்பான்மையான எம்பி.க்கள் ஆதரவுடன் சகாபுதீன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

Related Stories: