அமெரிக்காவில் பறந்தது போன்று கனடாவில் பறந்த மர்ம உருளை வடிவ பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது: சீனாவின் கைவரிசையா?

நியூயார்க்: அமெரிக்காவில் மர்ம பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது போன்று கனடாவிலும் மர்ம உருளை வடிவ பலூன் போன்ற பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். கனடா நாட்டின் வடக்கில் உள்ள யூகோன் பிரதேசத்தில் பலூன் போன்று அடையாளம் தெரியாத உருளை வடிவப் பொருள் ஒன்று வான் மண்டலத்தில் பறந்தது.

இதனை கண்காணித்த கனடா ராணுவம், அமெரிக்காவின் எப்-22 போர் விமானத்தை பயன்படுத்தி நேற்றிரவு அடையாளம் தெரியாத அந்த உருளை வடிவப் பொருளை சுட்டு வீழ்த்தியது. இந்த தகவலை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதிப்படுத்தி உள்ளார். அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் பறந்த சீன உளவு பலூன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக கனடாவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கனடாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் அனிதா ஆனந்த் கூறுகையில், ‘சுட்டு வீழ்த்தப்பட்ட பொருள் உருளை வடிவில் இருந்தது. இருப்பினும், பொருளின் தோற்றம் குறித்து தற்போது எதுவும் தெரிவிக்க இயலாது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தென் கரோலினா கடற்கரையில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன பலூனை விட இந்த பொருள் சிறியதாக இருந்தது. ஆனால் அதேபோன்ற தோற்றத்தில் இருந்தது. சுமார் 40,000 அடி உயரத்தில் பறந்த அந்த உருளை வடிவிலான பொருள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

Related Stories: