மக்கள் செங்கல்லை எடுப்பதற்குமுன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணியை ஒன்றிய அரசு துவக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

பூந்தமல்லி:  போரூரில் இன்று காலை ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கான கிரிக்கெட், இறகு பந்து மற்றும் கால்பந்து போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று துவக்கி வைத்தார். மதுரையில் மக்கள் செங்கல்லை எடுப்பதற்கு முன், அங்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை ஒன்றிய அரசு துவக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியின்போது வலியுறுத்தினார். தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கான கிரிக்கெட், இறகு பந்து மற்றும் கால்பந்து போட்டிகளில் சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெறுவது வழக்கம்.

இதேபோல், இந்த ஆண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டு போட்டிகள் இன்று காலை போரூரில் நடைபெற்றது. இப்போட்டிகளை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று துவக்கி வைத்தார். முதல்கட்டமாக, ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான கிரிக்கெட் போட்டியை உதயநிதி ஸ்டாலின் நாணயத்தை சுண்டிவிட்டு துவக்கினார். பின்னர் ஒருவர் பந்து வீச, உதயநிதி ஸ்டாலின் மட்டையை சுழற்றி பந்தை அடித்து கிரிக்கெட் விளையாடினார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்த ஆண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கான முதல் போட்டியை துவக்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 

கடந்த ஒன்றரை மாதங்களாக பல்வேறு விளையாட்டு அரங்குகளுக்கு நேரில் சென்று, சம்பந்தப்பட்டவர்களின் குறைகளை கேட்டு, அதிகாரிகளுடன் கலந்து பேசி, அவற்றை முதல்வரிடம் கோரிக்கையாக வைத்துள்ளோம். இதைத் தொடர்ந்து, முதல்வரின் அறிவுறுத்தலின்படி நல்ல அறிவிப்புகள் விரைவில் வரும். இதேபோல் ஒடிசா மாநில விளையாட்டு கட்டமைப்புகளை நேரில் ஆய்வு செய்து, முதல்வரிடம் கூறியுள்ளோம். இதற்கான நல்ல அறிவிப்புகள் வெளிவரும். கடந்த சட்டமன்றத் தேர்தலில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம் குறித்து செங்கல்லை கையில் வைத்து சுற்றி வந்து பிரசாரம் செய்தேன். தற்போது அதை அனைவரும் பேச ஆரம்பித்து உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை துவங்க அம்மாவட்ட மக்கள் கையில் செங்கல்லை எடுப்பதற்கு முன், ஒன்றிய அரசு இப்பணியை விரைவில் துவங்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை வலியுறுத்துகிறேன். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: