ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எடப்பாடி அணி வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம்: 2 நாட்கள் மட்டும் ஈடுபடுவார் என்று அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், எடப்பாடி அணி வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை 2 நாட்கள் பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில், வருகிற 27ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எடப்பாடி அணி சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார். ஆனால், கடைசி வரை எடப்பாடி, ஓபிஎஸ் அணியில் யாருக்கு ஆதரவு அளிப்பதில் பாஜ தொடர்ந்து இழுபறி செய்து வந்தது. தொடர்ந்து ஒரு கட்டத்தில் பாஜவின் ஆதரவு தேவை இல்லை என்ற நிலைக்கு எடப்பாடி அணி வந்தது. அதாவது, பாஜ ஆதரவு தந்தால் ஏற்று கொள்வோம், வராவிட்டாலும் சந்தோஷம் தான்.

பாஜவுடன் எந்த பேச்சுவார்த்தையிலும் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஈடுபட வேண்டாம் என்று எடப்பாடி கடந்த 2 வாரத்திற்கு முன்னர் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதற்கிடையில் கடைசியில் இடைத்தேர்தலில் எங்கள் அணி வேட்பாளர் போட்டியிடவில்லை என்று ஓபிஎஸ் அறிவித்தார். இதைத் தொடர்ந்து எடப்பாடி அணிக்கு ஆதரவு அளிப்பதாக பாஜ தலைவர் அண்ணாமலை அறிவித்தார். ஆதரவு அளித்த கையோடு அண்ணாமலை இலங்கைக்கு புறப்பட்டு சென்று விட்டார். அவர் இடைத்தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்கும் வகையில் இலங்கை சென்றதாக அப்போது ஒரு தகவல் வெளியானது. இந்த நிலையில் பாஜ தலைவர் 3 நாட்கள் இலங்கை சுற்று பயணத்தை முடித்து கொண்டு இன்று காலை 4 மணியளவில் சென்னை திரும்ப உள்ளார். சென்னை திரும்பியுள்ள அவர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி அணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அதாவது, வருகிற 19, 20ம் தேதி என 2 நாட்கள் அவர் பிரசாரம் செய்ய உள்ளதாக பாஜ தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Stories: