ரோகித் சர்மா சதம் விளாசியது சிறப்பான இன்னிங்ஸ்: விக்ரம் ரத்தோர் பாராட்டு

நாக்பூர்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள்இடையே முதல் டெஸ்ட் நாக்பூரில் நடந்துவரும் நிலையில், நேற்று 2வது நாள் ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் அளித்த பேட்டி: சதம் விளாசிய ரோகித் சர்மாவின் ஆட்டம் மிகவும் சிறப்பானது, அவர் அபாரமான திறமையை வெளிப்படுத்தினார்.

சூழ்நிலைக்கு ஏற்பவும், பேட்டிங் பாணியை மாற்றியமைக்கும் திறமையும் தான் அவர் சதம் அடிக்க உதவியது. 66 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதன்பின் சதம் அடிக்க 105 பந்துகளை எதிர்கொண்டார். ஒரு பேட்ஸ்மேனாக அவருக்கு இருக்கும் தரம் அதுதான் என்று நினைக்கிறேன். அவர் உண்மையில் நன்றாக செயல்பட்டார். அவர் தனது விளையாட்டை மாற்றக்கூடியவர். இந்தியாவில் எப்படி விளையாடுகிறார், ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் எப்படி ரன்கள் எடுத்தார் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த பிட்ச் எளிதானது அல்ல. ரன்களை எடுக்க கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது, என்றார்.

தொடர்ந்து கே.எல்.ராகுல் ஆடும் லெவனில் இடம் பெறுவது அவரின் அதிர்ஷ்டமா என்று கேட்டபோது, ​​அது குறித்து என்னால் கருத்து கூறமுடியாது. அவர் தனது கடைசி 10 டெஸ்டில் இரண்டு சதங்களை அடித்துள்ளார். ஒன்று இங்கிலாந்திலும் மற்றொன்று தென்னாப்பிரிக்காவில் மற்றும் இரண்டு அரை சதங்களையும் அடித்துள்ளார், என்றார்.

அரை சதம் விளாசிய அக்சர் பட்டேல் கூறுகையில், கடந்த ஆண்டு ஃபார்மின் நம்பிக்கையை நான் பேட் மூலம் கொண்டு சென்றுள்ளேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் அதை வலுப்படுத்துகிறேன். ஆரம்பத்தில் இந்த ஆடுகளத்தில் பேட்டிங் கடினமாக இருக்கும், ஆனால் நீங்கள் பழகிவிட்டால் போதும். இது மிகவும் எளிதானது. இந்த ஆடுகளத்தில் கடுமையாக கவனம் செலுத்த வேண்டும். இந்த பிட்சில் நாங்கள் பந்து வீசும்போது, புத்துணர்ச்சியுடன் இருப்போம், என்றார்.

Related Stories: