அவதிக்குள்ளாகும் தொழிலாளர்கள்; குப்பைகளால் திணறும் கப்பலூர் சிட்கோ: அகற்ற நடவடிக்கை தேவை

திருமங்கலம்: தமிழகத்தின் இரண்டாவது பெரிய சிட்கோ தொழிற்பேட்டை என பெயர் எடுத்த கப்பலூர் சிட்கோ, தற்போது குப்பை கழிவுகளால் திணறி வருவதால் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூரில் சிட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியான பெரிய சிட்கோ என்ற பெயர் கப்பலூர் சிட்கோவிற்கு உள்ளது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக சிட்கோவில் முக்கிய பகுதிகளில் எல்லாம் குப்பைகள் மலை போல் குவிந்து துர்நாற்றம் வீசிவருவதால் தொழிலாளர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

பஞ்சுகழிவுகள், துணி மூட்டைகள், காகித குப்பைகள், பழைய இரும்பு கழிவுகள் என திரும்பிய பக்கம் எல்லாம் குப்பைகள் நிரம்பி காணப்படுகின்றன.

இதுகுறித்து சிட்கோவில் தொழில் நிறுவனம் நடத்திவரும் கதிரேசனிடம் கேட்டபோது, கப்பலூர் சிட்கோவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் குப்பை வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் உச்சப்பட்டி பஞ்சாயத்திற்கு முறையாக செலுத்தி வருகிறோம். மதுரை மாவட்டத்தில் அதிக வருவாய் வரும் பஞ்சாயத்துகளில் முதலிடத்தில் உச்சப்பட்டி அமைந்துள்ளது. ஆனால் பஞ்சாயத்து நிர்வாகம் சிட்கோவை மட்டும் பராமுகமாக நடத்தி வருகிறது.

ஒருநாள் கூட சிட்கோவிற்குள் குப்பைகள் அள்ள ஊழியர்கள் வருவதில்லை. இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் சிட்கோ தொழில் அதிபர் சங்கத்திடம் பலமுறை புகார் செய்துவிட்டோம். இருப்பினும் எங்களுக்கு பலன் இல்லை. குப்பைகள் அதிகளவில் தேங்குவதால் துர்நாற்றம் வீசி தொழிலாளர்களுக்கு நோய் தொற்று பரவும் ஆபத்து நிலவுகிறது என்றார். சிட்கோ தொழில் அதிபர்கள் சங்கத்தலைவர் ரகுநாதராஜவிடம் கேட்டபோது, கப்பலூர் சிட்கோ மெயின்டன்ஸ் செலவுக்கு நாங்கள் பணம் வாங்கி கொள்கிறோம். மின் கட்டணம், மாசு பரவாமல் இருக்க அடர்காடுகளுடன் மரங்கள் வளர்த்தல், இரவு நேர காவலாளி ஊதியம் உள்ளிட்டவை எங்கள் பொறுப்பாக உள்ளது.

இதுதவிர அனைத்து விதமான வரிகளையும் உச்சப்பட்டி பஞ்சாயத்திற்கு செலுத்துகிறோம். ஆனால் அவர்கள் குப்பைகளை கூட அள்ள வரமறுக்கின்றனர்.

அத்துடன் சாலை வசதிகளை செய்துதர மறுக்கின்றனர். இது சம்மந்தமாக திருமங்கலம் வட்டார வளர்ச்சி ஆணையாளரிடம் புகார் செய்தோம். அவர் விரைவில் திருமங்கலம் யூனியனுக்கு பேட்டரி வாகனங்கள் வரவுள்ளன. அவற்றில் ஒன்றை சிட்கோவிற்கு குப்பைகள் அள்ள ஒதுக்கித்தருவாக கூறியுள்ளார் என்றார். வருவாயில் முதலிடத்தில் இருக்கும் உச்சப்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம், சிட்கோ தொழிற்பேட்டையில் குப்பை அள்ளுவதில் தயக்கம் காட்டுவது ஏன் என தெரியவில்லை என்கின்றனர் சிட்கோ தொழிலாளர்கள்.

Related Stories: