மக்களவையில் தயாநிதி மாறன் எம்பி கேள்வி: மதுரை எய்ம்ஸ் பணிகளில் தாமதம் ஏன்?

புதுடெல்லி: ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணிகளில் தாமதம் ஏன்?’ என திமுக எம்பி தயாநிதி மாறன் மக்களவையில் கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவையில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணி தொடர்பாக, ஒன்றிய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினார். அதன் விவரங்கள் பின்வருமாறு:

* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் மந்த நிலையில் நடைபெற்று வருவதை ஒன்றிய அரசு கவனத்தில் கொண்டுள்ளதா என்றும், அவ்வாறெனில் அதற்கான காரணங்களை விவரமாக தெரியப்படுத்தவும்?.

* எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டு, செலவிடப்பட்ட நிதி எவ்வளவு என்பதை ஆண்டு வாரியாக பட்டியலிட்டு தெரியப்படுத்தவும்?

* இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி எவ்வளவு எனவும், நடப்பு நிதியாண்டிற்காக ஒதுக்கப்பட்டு, செலவிடப்பட்ட நிதி எவ்வளவு?

* எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்திற்கு தேவையான நிலங்களை ஒதுக்கீடு செய்தல் மற்றும் பிற அலுவல் பணிகளை தமிழ்நாடு அரசு நிறைவு செய்துள்ளதா?

* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் ஆட்சேர்க்கைக்காகவும், கல்வி உதவித் தொகை, சம்பளம் உள்ளிட்ட நிர்வாக செயல்பாடுகளுக்காகவும் ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ள நிதி எவ்வளவு?

* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக செயல்படுவதற்கு ஏதேனும் மாற்று இடமோ அல்லது நிறுவனமோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஒன்றிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் அளித்த பதிலில், ‘‘மதுரை எய்ம்சில் சுற்றுச்சுவர் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கான முன் முதலீட்டு நடவடிக்கை 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. திட்ட மேலாண்மை ஆலோசகர் நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. அத்துடன் அதற்கான தொழில்நுட்ப ஏலம் விடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக அமைச்சகம் தொடக்கத்தில் ரூ.1264 கோடி நிர்ணயம் செய்திருந்தது. இருப்பினும் தற்போதைய நிலவரத்துக்கு ஏற்ப அதனை மறுசீராய்வு செய்து ரூ.1977.8 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 82 சதவீதம் நிதியினை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் கடன் உதவியுடன் இத்திட்டம் தொடங்க உள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் ஆட்சேர்க்கைக்காகவும், கல்வி உதவித்தொகை, சம்பளம் உள்ளிட்ட நிர்வாக செயல்பாடுகளுக்காக கடந்த 2020-2021ம் நிதியாண்டு வரை ரூ.12.35 கோடியும், 2021-2022ம் நிதியாண்டிற்கு ரூ.22.10 கோடியும், 2022-23ம் நிதியாண்டிற்கு ரூ.34.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 2022 முதல் மதுரை எய்ம்ஸ் கல்லூரியின் 50 மாணவர்கள் தமிழ்நாடு அரசு ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் பயில தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: